எந்த சட்ட பாதுகாப்பையும் அனுபவிக்க முடியாது; கவர்னர் கிரண்பெடி
எந்த சட்ட பாதுகாப்பையும் கவர்னர் மாளிகை அனுபவிக்க முடியாது. மக்களுக்கு தவறான தகவல் பரப்புவது துரதிர்ஷ்டமானது என்று கவர்னர் கிரண்பெடி வேதனை தெரிவித்தார்.
புதுச்சேரி,
புதுவை கவர்னர் கிரண்பெடி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கவர்னரின் அலுவலகம் மற்றும் செயலகம் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து தினசரி தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. உள்துறை மந்திரியின் வருகைக்காக கவர்னர் மாளிகை முழுமையாக சுகாதார முறையில் சுத்தம் செய்யப்பட்டது. மத்திய மந்திரி முழுமையாக கொரோனா நடத்தை விதிமுறைகளை பின்பற்றும் ஒரு பாதுகாப்பான, சுத்தமான மற்றும் செயல்பாட்டு அலுவலகத்திற்கு வந்து சென்றார்.
நிதி மற்றும் கொள்கை உருவாக்கும் அதிகாரங்கள் தொடர்பாக ஜனாதிபதியால் வழங்கப்பட்ட நிதி நிர்வாக மற்றும் பிற அதிகாரங்களை கவர்னர் பயன்படுத்தி வருகிறார். நாடாளுமன்றத்தின் யூனியன் பிரதேச சட்டம் அலுவல் விதிகள், நிதி மற்றும் நிர்வாக பொறுப்புகளை நிர்வகிக்கும்போது நிதி விதிகள் ஆகியவை குறித்தும் கடந்த காலங்களில் பலமுறை தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
புதுவை யூனியன் பிரதேசம் என்பதால் இது அவ்வப்போது மத்திய அரசின் கொள்கை மற்றும் அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப மாறுபடும். இச்சட்டங்கள் விதிகள், நடைமுறைகள் மற்றும் பொறுப்புகள் சுப்ரீம் கோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டினால் மீண்டும் மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளன. கவர்னர் மற்றும் செயலகம் இந்த விதிகள், சட்டங்களை நன்கு அறிந்துள்ளனர்.
இதுசம்பந்தமாக அவ்வப்போது மத்திய அரசின் சட்ட வல்லுனர்கள் போதுமான அளவு சட்டப்பூர்வமாக தெளிவுபடுத்துகிறார்கள். இந்த அலுவலகம் ஒரு யூனியன் பிரதேசம் என்பதால் மத்திய அரசின் உத்தரவுகளுக்கு கட்டுப்பட்டது.
இந்த அலுவலகத்தில் எடுக்கப்படும் முடிவுகள் அனைத்தும் மத்திய தலைமை கணக்காய்வாளரின் தணிக்கை மற்றும் நிதியியல் ஆய்வுகளுக்கு உட்பட்டது என்பதை கவர்னரின் அலுவலகம் முழுமையாக உணர்ந்துள்ளது.
யூனியன் பிரதேசத்தின் கவர்னர் எந்தவிதமான சட்ட பாதுகாப்பையும் அனுபவிக்க முடியாது. இங்கு இயற்றப்பட்ட சட்டங்கள், விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் போன்றவற்றை மீறுகின்ற எதையும் செய்ய முடியாது. இப்போது ஆட்சி செய்து கொண்டிருக்கும் அரசு முழுமையாக இதை அறிந்தே இருக்கிறது. எனினும் அது தவறான தகவல்களை மக்களுக்கு வழங்க விரும்பினால், இது உண்மையிலேயே துரதிர்ஷ்டவசமானது.
கவர்னரும், அவரது அலுவலகமும், சட்டவிரோதமாக எதையும் செய்யமாட்டார்கள் என்பதை புதுச்சேரி மக்கள் புரிந்துகொள்வார்கள் என்பது எனக்கு தெரியும். எனவே நாங்கள் மக்களின் நலன்கருதி எல்லாவிதத்திலும் நிர்வாக ரீதியாக நேர்மையானவற்றை மட்டுமே செய்வோம் என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.