மண்ணச்சநல்லூரில் 5 டன் ரேஷன் அரிசி பதுக்கிய 3 பேர் கைது

திருச்சி அருகே மண்ணச்சநல்லூரில் 5 டன் கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.;

Update: 2021-01-06 01:18 GMT
திருச்சி,

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் இந்திரா நகரில் ஒரு மாவு அரைக்கும் மில்லில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் மற்றும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் தலைமையில் நேற்று முன்தினம் இரவு அந்த மாவு மில்லில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு 100 மூட்டை ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 5 டன் எடையுள்ள அந்த அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். போலீஸ் விசாரணையில் அவை, பல்வேறு இடங்களில் உள்ள ரேஷன் கடைகளில் இருந்து கடத்திக் கொண்டு வரப்பட்டது என்பதும், அவற்றை மாவாக அரைத்து இரவு நேர டிபன் கடைகள் மற்றும் ஓட்டல்களுக்கு விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.

3 பேர் கைது

இதனைத் தொடர்ந்து அரிசி மூட்டைகளை அங்கு பதுக்கி வைத்திருந்த மாவு மில்லின் உரிமையாளர் தியாகராஜன் (வயது 58) , அவரிடம் வேலை செய்த ஊழியர்கள் ரங்கராஜ் (58) , அவரது மகன் கார்த்திக் (28) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரும் நேற்று திருச்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு எண் 6 கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அவர்களை வருகிற 19-ந்தேதி வரை நீதித்துறை காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அவர்கள் 3 பேரும்திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்