வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த 4 மோட்டார் சைக்கிள்கள் தீ வைத்து எரிப்பு திருவெறும்பூர் அருகே நள்ளிரவில் பரபரப்பு

திருவெறும்பூர் அருகே வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த 4 மோட்டார் சைக்கிள்கள் நள்ளிரவில் தீவைத்து எரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-01-06 01:15 GMT
திருவெறும்பூர்,

திருச்சியை அடுத்த திருவெறும்பூர் அருகே ஆலத்தூர் காந்திநகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 45). ரெயில்வே ஊழியர். அதே பகுதியை சேர்ந்த வாழை வியாபாரிகள் ராஜ்குமார் (40), புருஷோத்தமன் (42). மற்றும் நேதாஜிநகரை சேர்ந்தவர் சிவக்குமார் (43).

இந்தநிலையில் இவர்கள் 4 பேரும் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தனா். பின்னர், தங்கள் மோட்டார் சைக்கிளை தங்களது வீட்டின் முன் நிறுத்திவிட்டு தூங்கச்சென்றனர். நேற்று காலை எழுந்து பார்த்தபோது இவர்கள் 4 பேரின் மோட்டார் சைக்கிள்கள் தீவைத்து எரிக்கப்பட்டிருந்தன.

மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுபற்றி திருவெறும்பூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீசார் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் யாரோ மர்ம நபர்கள் 4 மோட்டார் சைக்கிள்களுக்கும் தீவைத்து சென்றது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள்களுக்கு தீவைத்துச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்