வடகாடு அருகே நள்ளிரவில் ஓம் சக்தி வாரவழிபாட்டு மன்றம் வெடிவைத்து தகர்ப்பு

வடகாடு அருகே நள்ளிரவில் ஓம்சக்தி வாரவழிபாட்டு மன்றத்தை வெடிவைத்து தகர்த்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;

Update: 2021-01-06 00:21 GMT
வடகாடு,

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே புள்ளான்விடுதி மேற்கு பகுதியில் ஓம் சக்தி வாரவழிபாட்டு மன்றம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் இப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் விரதமிருந்து இருமுடி கட்டி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு செல்வது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு நேற்று கோவிலுக்கு செல்வதாக இருந்தது.

இதற்கிடையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. அந்த பகுதி மக்கள் ஏதோ வெடி, வெடிப்பார்கள் என்று நினைத்து தூங்கி விட்டனர். இந்தநிலையில் நேற்று அதிகாலையில் வழக்கம்போல் வாரவழிபாட்டு மன்றத்துக்கு வந்த பக்தர்கள், மன்றத்தின் மேற்கூரை உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

வெடிவைத்து தகர்ப்பு

மேலும், வெடிமருந்து துகள்கள் காணப்பட்டன. இதனால் யாரோ மர்ம நபர்கள் நள்ளிரவில் வாரவழிபாட்டு மன்றத்தை வெடிவைத்து தகர்த்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து வாரவழிபாட்டு மன்ற பக்தர்கள் கூறும்போது, கடந்த வருடமும் வாரவழிபாட்டு மன்றத்தை மர்ம நபர்கள் சேதப்படுத்தினர். அதேபோல் இந்த ஆண்டும் வெடிவைத்து தகர்த்துள்ளனர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி வடகாடு போலீசில் புகார் செய்துள்ளோம், என்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வடகாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, வாரவழிபாட்டு மன்றத்தை வெடிவைத்து தகர்த்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்