இங்கிலாந்தில் இருந்து பெங்களூருவுக்கு வந்த 114 பேர் தலைமறைவு: மாநகராட்சி, சுகாதாரத்துறை முரண்பட்ட தகவலால் பரபரப்பு
இங்கிலாந்தில் இருந்து பெங்களூருவுக்கு வந்த 114 பேர் தலைமறைவாக இருப்பது தெரியவந்துள்ளது. மாநகராட்சியும், சுகாதாரத்துறையும் முரண்பட்ட தகவல்களை கூறி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூரு,
இங்கிலாந்தில் புதிய கொரோனா வைரஸ் உருவாகி உள்ளது. இதன் காரணமாக இங்கிலாந்தில் இருந்து பெங்களூருவுக்கு வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. புதிய கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகும் நபர்கள் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், இங்கிலாந்தில் இருந்து கடந்த மாதம் (டிசம்பர்) 4-ந்தேதி, 348 பேர் கர்நாடகத்திற்கு வந்திருந்தனர். அவர்கள் எல்லாருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.
பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் நேற்று வரை 11 பேருக்கு புதிய கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாக மந்திரி சுதாகர் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் இங்கிலாந்தில் இருந்து பெங்களூருவுக்கு வந்தவர்களில் 75 பேர் தலைமறைவாக இருப்பதாகவும், அவர்களை தேடு கண்டுபிடிக்க உள்துறையின் உதவியை நாடி இருப்பதாக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் தெரிவித்துள்ளார். சுகாதாரத்துறை அதிகாரிகளும் 75 பேர் தலைமறைவாக உள்ளதாக கூறி வருகின்றனர்.
ஆனால் இங்கிலாந்தில் இருந்து பெங்களூருவுக்கு வந்தவர்களில் 114 பேர் தலைமறைவாக இருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்கள் தங்களது செல்போன் எண்களை சுவிட்ச் ஆப் செய்து வைத்திருப்பதால், தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும், போலீசார் உதவியுடன், அவர்களை தேடும் பணி நடந்து வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தலைமறைவாக இருப்பவர்கள் பற்றி சுகாதாரத்துறையும், மாநகராட்சியும் முரண்பட்ட தகவல்களை கூறி வருவது ஆதங்கத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
தலைமறைவாக உள்ளவர்கள் புதிய கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருந்தால், அவர்கள் மூலம் பெங்களூரு நகரவாசிகளுக்கு வேகமாக பரவ வாய்ப்புள்ளது. இது பெங்களூரு நகரவாசிகள் இடையே ஆதங்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதையடுத்து, தலைமறைவாக உள்ளவர்களை தேடி கண்டுபிடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.