ஊத்துக்குளி அருகே டிராக்டர் கவிழ்ந்து தொழிலாளி பலி
ஊத்துக்குளி அருகே டிராக்டர் கவிழ்ந்து தொழிலாளி பலியானார். இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-;
ஊத்துக்குளி,
ஊத்துக்குளி அருகே உள்ள பல்லகவுண்டன்பாளையம் பகுதியில் தனியார் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் இருந்து சிமெண்டு் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு டிராக்டர் ஒன்று அதே நிறுவனத்திற்கு சொந்தமான விருமாண்டம்பாளையம் ஊராட்சி பகுதியில் செயல்படும் மற்றொரு நிறுவனத்திற்கு சென்று கொண்டிருந்தது.
டிராக்டரை விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியை சேர்ந்த வேல்முருகன் என்பவர் ஓட்டிச் சென்றார். டிராக்டரின் பின்பகுதியில் வாமணகவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த தொழிலாளி பழனிச்சாமியும் (வயது 48), அவரது 4 நண்பர்களும் பயணம் செய்தனர். விருமாண்டம்பாளையம் ஊராட்சி பகுதி அருகே டிராக்டர் சென்று கொண்டிருந்ததத. அப்போது எதிரே மற்றொரு வாகனம் வந்தது. அந்த வாகனத்திற்கு வழி விடுவதற்காக டிராக்டரை டிரைவர் சாலையோரம் திருப்பினார்.
அப்போது எதிர்பாராத விதமாக குழியில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் பழனிச்சாமி தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்றவர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.
இந்த விபத்து பற்றிய தகவல் கிடைக்கப்பெற்ற ஊத்துக்குளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து பழனிச்சாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.