தேன்கனிக்கோட்டை அருகே விபத்து: கார் மீது பஸ் மோதி டிரைவர் பலி - பயணிகள் 10 பேர் காயம்

தேன்கனிக்கோட்டை அருகே கார் மீது பஸ் மோதிய விபத்தில் டிரைவர் பலியானார். மேலும் பயணிகள் 10 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2021-01-05 14:09 GMT
தேன்கனிக்கோட்டை,

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து தனியார் பஸ் நேற்று ஓசூர் வழியாக பயணிகளை ஏற்றிக்கொண்டு தேன்கனிக்கோட்டை நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது சின்னபெண்ணாங்கூர் என்ற இடத்தில் பஸ் ஒரு வளைவில் திரும்பியபோது எதிரே வந்த கார் மீது மோதியது.

இந்த விபத்தில் தேவர்உலிமங்களம் கிராமத்தை சேர்ந்த கார் டிரைவர் அம்ப்ரீஷ் (வயது 31) என்பவர் படுகாயம் அடைந்தார். அதேபோல பஸ்சில் பயணம் செய்த பயணிகள் சாப்ராணப்பள்ளி கிராமத்தை சேர்ந்த சக்திவேல் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தேன்கனிக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் கார் டிரைவர் அம்ப்ரீஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் காயம் அடைந்த பயணிகள் முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்கள். இந்த விபத்து குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்