7 லட்சத்து 11 ஆயிரம் ரேஷன் கார்டு தாரர்களுக்கு ரூ.2 ஆயிரத்து 500 தொகையுடன் பொங்கல் பரிசு; ஈரோட்டில் எம்.எல்.ஏ.க்கள் வழங்கினர்
மாவட்டத்தில் உள்ள 7 லட்சத்து 11 ஆயிரம் ரேஷன் கார்டு தாரர்களுக்கு ரூ.2 ஆயிரத்து 500 தொகையுடன் பொங்கல் பரிசு வழங்கும் பணி நேற்று தொடங்கியது. ஈரோட்டில் எம்.எல்.ஏ.க்கள் வழங்கினர்.
பொங்கல் பரிசு
பொங்கல் பண்டிகையையொட்டி அரிசி ரேஷன் கார்டு தாரர்களுக்கு ரூ.2 ஆயிரத்து 500, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய் மற்றும் ஒரு முழு கரும்பு ஆகிய பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை கடந்த மாதம் 20-ந்தேதி தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து, பொங்கல் பரிசு தொகுப்பில் உள்ள திராட்சை, முந்திரி, ஏலக்காய் ஆகிய பொருட்கள் அந்தந்த ரேஷன் கடைகளுக்கு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மற்றும் கூட்டுறவு பண்டக சாலை மூலம் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. ரேஷன் கடை ஊழியர்கள் அதனை எடைக்கு ஏற்ப பொட்டலம் செய்து துணிப்பையில் போட்டு தயாராக வைத்திருந்தனர்.
மேற்கு தொகுதி
இந்த நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் ரூ.2 ஆயிரத்து 500 தொகையுடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் நேற்று தொடங்கியது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள 7 லட்சத்து 10 ஆயிரத்து 996 ரேஷன் கார்டு தாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி நேற்று தொடங்கியது.
ஈரோடு மேற்கு தொகுதியில் காசிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கே.வி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. பகுதி செயலாளர் ஜெகதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.
கிழக்கு தொகுதி
கிழக்கு தொகுதியில், பி.பி.அக்ரஹாரம் உள்ளிட்ட பகுதிகளில் கே.எஸ்.தென்னரசு எம்.எல்.ஏ. பொங்கல் பரிசு தொகுப்பை ரேஷன் கார்டு தாரர்களுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், ஈரோடு ஆர்.டி.ஓ.
சைபுதீன், தாசில்தார் பரிமளா தேவி, அ.தி.மு.க. பகுதி செயலாளர் ராமசாமி, இளைஞர் -இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் பி.பி.கே.மணிகண்டன், முன்னாள் கவுன்சிலர் காவிரி செல்வம், தோல் பதனிடும் ஆலை உரிமையாளர்கள் சங்க தலைவர் கருப்பணன் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.
இதேபோல் பெரியார் நகர் கருப்பண்ணன் வீதி உள்ளிட்ட பகுதிகளில், அ.தி.மு.க. பகுதி செயலாளர் மனோரன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், பகுதி அவைத்தலைவர் மீன் ராஜா என்கிற ராஜசேகர், மாநகர் பிரதிநிதி ஆஜம் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.
போலீஸ் பாதுகாப்பு
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாகவும், கூட்ட நெரிசலால் ஏற்படும் அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் நடவடிக்கையாகவும் காலை 9 மணி முதல் மதியம் 1.30 மணி வரையிலும், மதியம் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகிக்கப்படுகிறது.
அரிசி கார்டுதாரர்கள் எந்த தேதியில் பொருட்கள் வாங்க வரவேண்டும் என்பது குறித்து ரேஷன் கடை ஊழியர்கள் வீடு, வீடாக வழங்கிய டோக்கனில் குறிப்பிடப்பட்டு உள்ளது. எனவே அதன் அடிப்படையில் காலை வேளையில் 100 பேருக்கும், மதிய வேளையில் 100 பேருக்கும் பொருட்கள் வழங்கப்படுகிறது. இதையொட்டி ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.