கோவை கலெக்டர் அலுவலகம் முன் பரபரப்பு; இந்து முன்னணி நிர்வாகி மீது வழக்கு; மனைவி தீக்குளிக்க முயற்சி

இந்து முன்னணி நிர்வாகி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதால் அவருடைய மனைவி கோவை கலெக்டர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது. அவரை தடுத்து போலீசார் காப்பாற்றினார்கள்.;

Update: 2021-01-05 03:38 GMT
கோவை கலெக்டர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற லோகநாயகியை போலீசார் அழைத்து சென்ற காட்சி.
பொய் வழக்கு
கோவையை அடுத்த சூலூர் கலங்கல் பகுதியை சேர்ந்தவர் லோகநாயகி (வயது 32). இவருடைய கணவர் மணிகண்டன் (37). இந்து முன்னேற்ற கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர். இவருக்கும், சிங்காநல்லூர் காமராஜர் ரோடு பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஜீவானந்தம் (50) என்பவருக்கும் நிலப்பிரச்சினை இருந்து வந்தது.

இந்த நிலையில் மணிகண்டன் தன்னை மிரட்டுவதாக கூறி கடந்த மாதம் 25-ந் தேதி ஜீவானந்தம் கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றார். இதைத்தொடர்ந்து சிங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.

இந்த நிலையில், கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்ததாக மணிகண்டன் மீது போலீசார் பொய் வழக்கு பதிவு செய்ததாக கூறி அவருடைய மனைவி லோகநாயகி நேற்றுக்காலை கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தார்.

தீக்குளிக்க முயற்சி
அங்கு பணியில் இருந்த போலீசார், கலெக்டர் அலுவலகத்துக்கு வருபவர்களிடம் எங்கிருந்து வருகிறீர்கள் என்பது உள்ளிட்ட விவரங் களை விசாரித்து உள்ளே அனுப்பினர். அப்போது கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் முன் சற்றுதூரத்தில் நின்ற லோகநாயகி திடீரென்று தான் கொண்டு வந்த கேனில் இருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து சென்று தீக்குளிக்க விடாமல் தடுத்து அவரை மீட்டனர். பின்னர் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சொத்தை அபகரித்து விட்டதாக கூறி கலெக்டர் அலுவலகம் முன் மூதாட்டிகள் 4 பேரும், ஆட்டோ டிரைவர் ஒருவர் குடும்பத்துடனும் தீக்குளிக்க முயன்றனர். நேற்று பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் நடந்துள்ளது. எனவே கலெக்டர் அலுவலகம் முன் போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும் செய்திகள்