மயானத்திற்கு செல்ல சாலை வசதி இல்லாததால் சேறும், சகதியுமான பாதையில் சடலத்தை சுமந்து சென்ற அவலம்

கீரமங்கலம் ஆலடிக்கொல்லை பகுதியில் மயானத்திற்கு செல்ல சாலை வசதி இல்லாததால் சேறும், சகதியுமான கால்வாய் கரையில் சடலத்தை சுமந்து சென்று உறவினர்கள் தகனம் செய்ய விறகு கட்டைகள் ஏற்றிய வாகனத்தை கயிறுகட்டி இழுத்துச் சென்றனர்.;

Update: 2021-01-05 01:08 GMT
கீரமங்கலம்,

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் ஆலடிக்கொல்லை பகுதியில் வசிக்கும் மக்களுக்கான மயானம் மேக்கா குளத்தின் அருகில் உள்ளது. பல வருடங்களாக அந்த மயானத்தை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் மயானத்திற்கு செல்ல தார்சாலை வசதி இல்லாததால் யார் இறந்தாலும் ஒவ்வொரு முறையும் மிகவும் சிரமப்பட்டு சடலத்தை தூக்கிச் சென்று தகனம் செய்து வருகின்றனர்.

சடலத்தை தகனம் செய்ய பயன்படுத்தப்படும் விறகு கட்டைகளையும் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் தலையில் சுமந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. நேற்று அந்தப்பகுதியில் சின்னப்பொண்ணு என்கிற மூதாட்டி இறந்த நிலையில் மயானத்திற்கு உடலை வாகனம் மூலம் கொண்டு செல்ல முடியாத நிலையால் உறவினர்களே தூக்கிச் சென்றனர். மேலும் மூதாட்டியின் உடலை தகனம் செய்ய விறகுகட்டைகள் ஏற்றப்பட்ட சரக்கு ஆட்டோ செல்ல முடியாமல் தினறியதால் பாதி தூரம் வரை உறவினர்கள் கயிறுகட்டி வாகனத்தை இழுத்துச் சென்று பின்னர் உறவினர்கள் தூக்கி சுமந்து சென்று தகனம் செய்தனர். இதே நிலை பல வருடங்களாக தொடர்கிறது.

அதிகாரிகள் பேச்சுவார்த்தை

நேற்று ஆலடிக்கொல்லை மூதாட்டியின் சடலத்தை மயானத்திற்கு கொண்டு செல்ல சாலை வசதி இல்லாமல் அவதிப்படுவதை அறிந்து கீரமங்கலம் சரக வருவாய் ஆய்வாளர் முருகேசன், அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று மயானத்திற்கு செல்ல வழியில்லாமல் தவித்தனர். தொடர்ந்து அப்பகுதி பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் மயானத்திற்கான சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர். இது குறித்து அப்பகுதி இளைஞர்கள் கூறும் போது, ஆலடிக்கொல்லை பகுதியில் வசிப்பவர்கள் இறந்தால் மயானத்திற்கு கொண்டு செல்ல சாலை வசதி இல்லை. சாலை வசதி வேண்டும் என்று பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை. கோடை காலங்களில் இறந்தவர்கள் சடலங்களை தூக்கி சென்றுவிடலாம். ஆனால் இப்போது போல மழைக்காலங்களில் சேறும், சகதியுமான நடக்க முடியாத மண் சாலையில் சடலங்களை தூக்கிச் செல்கிறோம். நேற்று விறகுகளை ஏற்றி சென்ற வாகனம் செல்ல முடியாமல் கயிறுகட்டி இழுத்துச் சென்றோம். அதில் வழுக்கி விழுந்து சிலர் காயமடைந்துள்ளனர். மேலும் மதுபாட்டில்களை உடைத்துப் போடுவதால் மண்ணோடு புதைந்து கிடந்து காலில் குத்தி விடுகிறது. அதனால் உடனடியாக மயானச் சாலையை சீரமைக்கவில்லை என்றால் இனிமேல் சடலங்களை மயானத்திற்கு கொண்டு செல்லாமல் சாலையிலேயே வைத்திருப்போம் என்றனர்.

மேலும் செய்திகள்