மாலேகாவ் குண்டுவெடிப்பு வழக்கில் பெண் சாமியார் பிரக்யா சிங் எம்.பி. கோர்ட்டில் ஆஜர்
மாலேகாவ் குண்டுவெடிப்பு வழக்கில் பெண் சாமியார் பிரக்யா சிங் எம்.பி. மும்பை சிறப்பு கோர்ட்டில் ஆஜரானார்.
மும்பை,
நாசிக் மாவட்டம் மாலேகாவில் உள்ள தர்கா அருகே கடந்த 2008-ம் ஆண்டு செப்டம்பர் 29-ந் தேதி மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த குண்டு வெடித்ததில் 6 பேர் கொல்லப்பட்டனர். 100 பேர் காயம் அடைந்தனர். நாடு முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்திய இந்த குண்டு வெடிப்பு வழக்கை தேசிய புலனாய்வு முகமை கையில் எடுத்து விசாரித்தது.
இதில், தற்போது மத்திய பிரதேச மாநிலம் போபால் நாடாளுமன்ற தொகுதி பா.ஜனதா எம்.பி.யாக உள்ள பெண் சாமியார் பிரக்யா சிங் தாக்குர், முன்னாள் ராணுவ அதிகாரி பிரசாத் புரோகித் மற்றும் சமீர் குல்கர்னி, ரமேஷ் உபாத்யாய், சுதாகர் சதுர்வேதி, அஜய் ரகிர்கர், சுதாகர் திவேதி ஆகிய 7 பேரை கைது செய்து பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தற்போது அனைவரும் ஜாமீனில் உள்ளனர்.
இது தொடர்பான வழக்கு மும்பையில் உள்ள தேசிய புலானய்வு முகமை சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணையின் போது குற்றம்சாட்டப்பட்டவர்கள் வாரத்தில் ஒரு நாளாவது ஆஜராக வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. கடந்த மாதம் ஆஜராக 2 தடவை உத்தரவிட்டபோதிலும், பிரக்யா சிங் எம்.பி. ஆஜராகவில்லை. இதையடுத்து அதிருப்தி தெரிவித்த கோர்ட்டு நேற்றைய தினம் ஆஜராக அவருக்கு கடைசி வாய்ப்பை வழங்கி இருந்தது.
அதன்படி பிரக்யா சிங் எம்.பி. நேற்று மும்பை சிறப்பு கோர்ட்டில் நீதிபதி பி.ஆர். சிட்ரே முன்பு ஆஜரானார். மேலும் குற்றம்சாட்டப்பட்ட பிரசாத் புரோகித் உள்பட 4 பேர் ஆஜரானார்கள்.
பிரக்யா சிங் உள்பட 5 பேரும் குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட்டு இருந்தனர். குற்றம்சாட்டப்பட்ட மற்ற 2 பேரும் ஆஜராகவில்லை.
வழக்கில் சாட்சி ஒருவரும் ஆஜராகி இருந்தார். அவரது வக்கீல் வராததால் அந்த சாட்சியிடம் குறுக்கு விசாரணை நடத்தப்படவில்லை.
இதையடுத்து விசாரணையை இன்று (செவ்வாய்க்கிழமைக்கு) நீதிபதி ஒத்திவைத்தார். இந்த வழக்கில் 400 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டு உள்ளனர். இதுவரை 140 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.