மீஞ்சூரில் ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் 7 பேர் கைது; இழப்பீடு வழங்கக்கோரி உறவினர்கள் சாலை மறியல்
மீஞ்சூரில் ஆட்டோ டிரைவரை கொலை செய்த வழக்கில் 7 பேரை போலீசார் கைது செய்தனர். பலியானவரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க கோரி, உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வெட்டி கொலை
மீஞ்சூர் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 32). இவர் ஆட்டோ டிரைவராக இருந்து வந்த நிலையில், நேற்று முன்தினம் அரியன்வாயல் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடை அருகே 8 பேர் கொண்ட கும்பலால் வெட்டப்பட்டதில் படுகாயமடைந்தார். இதையடுத்து, சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த வழக்கை மீஞ்சூர் போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இதனை அடுத்து கொலை தொடர்பாக மீஞ்சூரை சேர்ந்த தேவராஜ் (26), மோகன் (21), அஜித் (25), சஞ்சய் (20) உள்ளிட்ட 7 பேரை கைது செய்தனர். இந்நிலையில் பலியான ராஜசேகர் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
சாலை மறியல்
இந்தநிலையில், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு ஆம்புலன்சில் உடல் கொண்டு செல்லும் வழியில் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள மீஞ்சூர் பஜாரில் உறவினர்கள் ஒன்று திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த மீஞ்சூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மதியரசன், சப்-இன்ஸ்பெக்டர் விஷ்ணு, மாரிமுத்து உட்பட போலீசார் வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது சாலையில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும், மீஞ்சூர் பகுதியில் கஞ்சா விற்பனை தடுக்க வேண்டும், இறந்தவர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்ததையடுத்து, சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.