மாமல்லபுரத்தில் ராட்சத அலை தாக்கி மீன் உலர் தளம் சேதம்: கரைப்பகுதியில் படகுகளை நிறுத்த வசதியாக இடிபாடுகள் அகற்றம்
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த கொக்கிலமேடு பகுதியில் ஏராளமான மீனவ குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.;
மீன்பிடி தொழிலை நம்பி வாழும் இவர்களுக்கு, மீன்களை உலர
வைத்து கருவாடாக மாறும் வகையில், கடற்கரை ஓரத்தில் கான்கிரீட்டால் ஆன மீன் உலர் தளம் உள்ளது.
இதற்கிடையே அப்பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கடல் சீற்றம் ஏற்பட்டு காங்கீரிட் சிமெண்ட் தளம் இடிந்து விழுந்தது. இந்த நிலையில், இடிந்து விழுந்த கான்கிரீட் சிமெண்ட் கற்கள் கரைப்பகுதி முழுவதும் சிதறி கிடந்ததால், மீனவர்கள் படகுகளை நிறுத்த இடம் இல்லாமல் தவித்து வந்தனர்.
இதையடுத்து மீனவர்களின் கோரிக்கையை ஏற்று, அ.தி.மு.க. சார்பில் திருக்கழுக்குன்றம் கிழக்கு ஒன்றிய செயலாளர் மாமல்லபுரம் ஜி.ராகவன் நேரில் சென்று பொக்லைன் எந்திரம் மற்றும் கிரேன் உதவியுடன் கரைப்பகுதியில் இடிபாடுகளை அகற்றி மீனவர்களின் படகுகள் நிற்க வழிவகை ஏற்படுத்தி கொடுத்தார். தங்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக தங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்றிய அ.தி.மு.க.வினருக்கு மீனவர்கள் நன்றி தெரிவித்தனர்.