9 முதல் 12-ம் வகுப்பு வரை புனேயில் பள்ளிகள் திறப்பு: 30 சதவீத மாணவர்கள் வருகை
புனேயில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. முதல் நாளில் 30 சதவீத மாணவர்கள் வருகை தந்தனர்.
மும்பை,
மராட்டியத்தில் கொரோனா பரவல் குறைய தொடங்கியதை தொடர்ந்து கடந்த நவம்பர் மாத இறுதி வாரத்தில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க கல்வி மந்திரி வர்ஷா கெய்க்வாட் உத்தரவிட்டார். மேலும் பள்ளிகளை திறக்கும் விஷயத்தில் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் முடிவு எடுத்து கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தினார்.
அதன்படி அனைத்து கிராமப்புறங்களிலும் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு விட்டன. மேலும் பல்வேறு நகர்ப்புறங்களிலும் பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவர்கள் ஆர்வத்துடன் படிப்பை தொடங்கி உள்ளனர். ஆனால் மும்பை, தானே, புனே போன்ற நகரங்களில் பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது.
இந்த நிலையில் புனே நகரில் நேற்று முதல் பள்ளிகளை திறக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்தது. அதன்படி மாநகராட்சி பகுதியில் அடங்கிய 9 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவர்கள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர். அவர்களை ஆசிரியர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
அதே நேரத்தில் நேற்று குறைந்த அளவில் தான் பள்ளிகள் திறக்கப்பட்டது. இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் நாளில் 30 சதவீத மாணவர்கள் மட்டுமே வருகை தந்தனர். மாணவர்கள் வகுப்பறையில் சமூக இடைவெளி விட்டு அமர வைக்கப்பட்டனர். முக கவசம் கட்டாயமாக்கப்பட்டது.
ஆசிரியர்கள், ஊழியர்களும் கொரோனா பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர்.
புனே கிராமப்புறங்களில் ஏற்கனவே பள்ளிகள் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதேபோல அவுரங்காபாத், நாக்பூர் நகரங்களில் நேற்று 9 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளி திறப்புக்கு முன் நாக்பூரில் 67 ஆசிரியர்களும், 5 ஊழியர்களும் தொற்று நோய்க்கு ஆளாகி இருப்பது தெரியவந்தது. அவர்கள் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.
இதேபோல அவுரங்பாத்தில் 2 ஆசிரியர்களும், 4 ஊழியர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. அவுரங்காபாத்தில் முதல் நாளில் 3-ல் ஒரு பங்கு மாணவர்கள் பள்ளிக்கு வருகை தந்ததாக கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.
புனே, நாக்பூர், அவுரங்காபாத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளதால் மும்பை, தானேயிலும் பள்ளிகளை திறப்பது குறித்து மாநகராட்சி நிர்வாகங்கள் ஆலோசித்து வருகின்றன. ஆனால் மும்பையில் சமீப நாட்களாக கொரோனா பாதிப்பு சற்று கணிசமாகவே இருப்பது குறிப்பிடத்தக்கது.