தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் தாமதம் இன்றி முதியோர் உதவித்தொகை வழங்க நடவடிக்கை சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. உறுதி

தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் தாமதம் இன்றி முதியோர் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. கூறினார்.

Update: 2021-01-04 06:22 GMT
ராஜபாளையம்,

ராஜபாளையம் அருகே உள்ள மலையடிப்பட்டியில் தி.மு.க. சார்பில் அ.தி.மு.க.வை நிராகரிப்போம் என்ற தலைப்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கப்பாண்டியன், ஊராட்சி ஒன்றிய சேர்மன் சிங்கராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. கூறியதாவது:-

சட்டமன்ற உறுப்பினராக தங்கப்பாண்டியன் பொறுப்பேற்ற பிறகு தான் ராஜபாளையம் பகுதியில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது.

ரெயில்வே மேம்பாலம்

பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்பட்டது. சத்திரப்பட்டி சாலையில் போக்குவரத்து தாமதத்தை சரி செய்ய ெரயில்வே மேம்பாலம் திட்டம் கொண்டு வரப்பட்டது.

நகருக்குள் போக்குவரத்து நெரிசலை குறைக்க புறவழிச்சாலை திட்டத்திற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. மேம்பாட்டு பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகள் விரைவில் சீரமைப்பு செய்யப்படும்.

அ.தி.மு.க. ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடைபெற்று உள்ளது. இந்தநிலை மாற வேண்டும் என்றால் மு.க.ஸ்டாலின் தலைமையில் நல்லாட்சி அமைய வேண்டும்.

நல்லாட்சி

மக்களுக்கு துரோகம் செய்யக்கூடிய ஆட்சி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சி நமக்கு வேண்டாம். நமக்கு நல்லாட்சி தரக் கூடியவர் ஸ்டாலின் மட்டும் தான்.

தற்போது நடைபெற்று வரும் பணிகள் முழுமையடைய மக்கள் தி.மு.க.விற்கு ஆதரவு தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

உதவித்தொகை

கூட்டத்தின் முடிவில் முதியோர் உதவித்தொகை கிடைக்கவில்லை என சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ.விடம் மனு அளித்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட அவர் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், தாமதம் இன்றி அனைவருக்கும் முதியோர் உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

கூட்டத்தில் நகர பொறுப்பாளர் ராமமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சுமதி, மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நவமணி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வேல்முருகன், மாவட்ட கவுன்சிலர் முத்துச்செல்வி மற்றும் நகர, ஒன்றிய கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்