மோகனூர் அருகே தொழிலாளி கொலை வழக்கில் டிரைவர்கள் 3 பேர் கைது

மோகனூர் அருகே தொழிலாளி கத்தியால் கழுத்தை அறுத்து கொைல செய்யப்பட்ட வழக்கில் டிரைவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-01-04 03:56 GMT
மோகனூர்,

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள ஒருவந்தூரை சேர்ந்தவர் சசிகுமார். கரூர் அருகே உள்ள காகித ஆலையில் தினக்கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரை, புத்தாண்டு அன்று மோகனூர் ரெயில் நிலையம் பின்புற பகுதியில் வைத்து அதே பகுதியை சேர்ந்த டிரைவர்களான மலர்மன்னன் (வயது 35), பிரகாஷ், (24), ரஞ்சித் (27) ஆகியோர் கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்தனர். இந்த கொலை தொடர்பாக மோகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும் இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட மலர் மன்னன், ரஞ்சித், பிரகாஷ் ஆகிய 3 பேரை போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையிலான போலீசார் பல்வேறு பகுதிகளில் வலைவீசி தேடி வந்தனர்.

கொரோனா பரிசோதனை

இந்தநிலையில் நேற்று காலை மோகனூரில் இருந்து பரமத்திவேலூர் செல்லும் சாலையில் உள்ள வள்ளியம்மன் கோவில் அருகே பதுங்கி இருந்த ரஞ்சித்தையும், மோகனூரில் இருந்து வாங்கல் செல்லும் காவிரி ஆற்று பாலத்தின் செக்போஸ்டில் நின்ற மலர்மன்னன், பிரகாஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட 3 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்து நாமக்கல் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

மேலும் செய்திகள்