மாவட்டத்தில் 25 மையங்களில் குரூப்-1 போட்டித்தேர்வை 4,359 பேர் எழுதினர் 3,382 பேர் தேர்வுக்கு வரவில்லை

நாமக்கல் மாவட்டத்தில் குரூப்-1 போட்டித்தேர்வை 4,359 பேர் எழுதினர். விண்ணப்பம் செய்திருந்த 3,382 பேர் தேர்வுக்கு வரவில்லை.

Update: 2021-01-04 03:53 GMT
நாமக்கல்,

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் குரூப்-1-ல் அடங்கிய உதவி கலெக்டர், துணை போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட பதவிகளுக்கான முதல்நிலை போட்டித்தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், சேந்தமங்கலம் மற்றும் மோகனூர் தாலுகாக்களை உள்ளடக்கிய 25 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது. தேர்வினை எழுத மொத்தம் 7,741 பேர் விண்ணப்பம் செய்து இருந்தனர். இவர்களில் 4,359 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். இது 56 சதவீதம் ஆகும். 3,382 பேர் தேர்வு எழுத வரவில்லை.

தேர்வாணையகுழு உறுப்பினர் ஆய்வு

நாமக்கல் வடக்கு அரசு மேல்நிலைப்பள்ளி, தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த மையத்தை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையகுழு உறுப்பினர் ஏ.வி.பாலுசாமி, கலெக்டர் மெகராஜ் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த தேர்விற்காக 25 முதன்மை கண்காணிப்பாளர்கள், 25 ஆய்வு அலுவலர்களும் நியமனம் செய்யப்பட்டு இருந்தனர். மேலும் முறைகேடுகள் நடக்காமல் இருக்க துணை கலெக்டர் நிலையில் 2 பறக்கும் படை அலுவலர்களும், துணை தாசில்தார்கள் தலைமையில் 5 நடமாடும் குழுவினரும் நியமிக்கப்பட்டு இருந்தனர். இவர்கள் ஒவ்வொரு மையமாக சென்று ஆய்வு செய்தனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முககவசம் அணிந்து வந்த தேர்வர்கள் மட்டுமே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வு மையத்திற்குள் கைப்பை, புத்தகங்கள், செல்போன், கால்குலேட்டர், மின்னணு கைகெடிகாரங்கள் அனுமதிக்கப்படவில்லை. அனைத்து தேர்வு மையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

சேந்தமங்கலம்

சேந்தமங்கலத்தில் உள்ள அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பேளுக்குறிச்சி கணவாய்மேட்டில் உள்ள அரசு கலைக்கல்லூரி, ரெட்டிபட்டியில் உள்ள பாரதி மேல்நிலைப்பள்ளி, ரெங்கேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரி உள்பட 8 தேர்வு மையங்களில் குரூப்-1 தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையொட்டி அந்த மையங்களில் தலா 20 வகுப்பறைகளில் தேர்வு எழுதினர். அதனை மாவட்ட வருவாய் அலுவலர் துர்கா மூர்த்தி நேற்று நேரில் ஆய்வு செய்தார். அவருடன் சேந்தமங்கலம் தாசில்தார் ஜானகி உடன் இருந்தார்.

மேலும் செய்திகள்