தொடர் மழை எதிரொலி: ஒரு மாதத்திற்கு மேலாக 60 அடியாக நீடிக்கும் வைகை அணை நீர்மட்டம்

தொடர் மழை எதிரொலியாக, வைகை அணையின் நீர்மட்டம் ஒரு மாதத்திற்கு மேலாக 60 அடியாக நீடித்து வருகிறது.;

Update: 2021-01-04 00:54 GMT
ஆண்டிப்பட்டி, 

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே வைகை அணை உள்ளது. 71 அடி உயரம் கொண்ட இந்த அணை தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட விவசாயத்திற்கும், குடிநீருக்கும் முக்கிய நீராதாரமாக விளங்குகிறது.

கடந்த ஆண்டு தேனி மாவட்டத்தில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் பெய்த மழை காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் 3 முறை 60 அடியை தாண்டியது.

இதையடுத்து அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள முதல்போக பாசன நிலங்களுக்கும், மேலும் கள்ளந்திரி, மேலூர் பகுதிகளின் ஒருபோக பாசன நிலங்களுக்கும் விவசாய தேவைக்காக கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக தண்ணீர் திறக்கப்பட்டது.

இதற்கிடையே கடந்த மாதம் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின் குடிநீர் தேவைக்காக ஆற்றுப்படுகை வழியாகவும் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்தநிலையில் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக வைகை அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டும், தொடர் மழையால் அணைக்கு போதுமான நீர்வரத்து இருந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் ஒரே அளவில் நீடிக்கிறது. குறிப்பாக கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக வைகை அணையின் நீர்மட்டம் 60 அடி என்ற அளவிலேயே நீடித்து வருகிறது.

முறை பாசனத்தின்படி இன்னும் சில வாரங்கள் மட்டுமே அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளதால், அதன்பிறகு தண்ணீரை இருப்பு வைத்து கோடைகால குடிநீர் தேவைக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்று பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர். இதனால் தேனி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் கோடைகாலத்தில் குடிநீர் பிரச்சினை இருக்காது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்தநிலையில் நேற்று காலை 6 மணி நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 59.42 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 989 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், அணையில் இருந்து தற்போது குடிநீர் தேவைக்காக மட்டும் வினாடிக்கு 69 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்