கீழ்வேளூர் பகுதியில் பலத்த மழை: அறுவடைக்கு தயாரான 5 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்தன விவசாயிகள் கவலை

கீழ்வேளூர் பகுதியில் பெய்த பலத்த மழையால் அறுவடைக்கு தயாரான 5 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Update: 2021-01-04 00:31 GMT
சிக்கல்,

நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றிய பகுதிகளில் கடந்த மாதம் நிவர், புரெவி புயல்களால் 10 நாட்களுக்கும் மேலாக மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் குளம் போல் தேங்கியிருந்தது.

மேலும் வயல்களில் தண்ணீர் சூழ்ந்து நெற்பயிர்கள் மூழ்கின. மழை விட்டதை தொடர்ந்து வெயில் அடித்ததால் வயல்களில் தேங்கிய தண்ணீ்ரை வெளியேற்றி பயிர்களை விவசாயிகள் காப்பாற்றினர்.

நெற்பயிர்கள் சாய்ந்தன

இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக கீழ்வேளூர் ஒன்றிய பகுதியில் மீண்டும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்றும் பலத்த மழை பெய்தது. இதனால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த 5 ஆயிரம் ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் சாய்ந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

கீழ்வேளூர் வட்டார பகுதிகளில் 20 ஆயிரம் ஏக்கரில் சம்பா, தாளடி நெற்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் பெய்த மழையினால் நெற்பயிர்கள் மூழ்கின.

பின்னர் வயலில் தேங்கியிருந்த மழைநீரை வெளியேற்றி பயிர்களை காப்பாற்றினோம். தற்போது பெய்து வரும் தொடர் மழையால் கீழ்வேளூர், அகரகடம்பனூர், கோவில் கடம்பனூர், திருக்கண்ணங்குடி, ஆனைமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த 5 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்துள்ளன.

இழப்பீடு வழங்க பரிந்துரை

இனிமேல் இந்த பயிர்களை காப்பாற்ற முடியாது. நெற்பயிர்களை அறுவடை செய்து பொங்கல் பண்டிகைக்கு புத்தரிசியில் ெபாங்கல் வைத்து கொண்டாடலாம் என்ற நம்பிக்கையில் இருந்தோம். ஆனால் மழையினால் நெற்பயிர்கள் சாய்ந்து மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய இழப்பீட்டு வழங்க அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்