பிவண்டியில் தம்பதியை நோக்கி துப்பாக்கியால் சுட்ட 2 பேருக்கு வலைவீச்சு கீழே குனிந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்
பிவண்டியில் தம்பதியை நோக்கி துப்பாக்கியால் சுட்ட 2 பேரை பிடிக்க போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கீழே குனிந்து கொண்டதால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
தானே,
தானே மாவட்டம் பிவண்டி கல்கேர் கிராமத்தை சேர்ந்த தம்பதி வருகிற 15-ந்தேதி நடக்க உள்ள அந்த கிராமத்தின் பஞ்சாயத்து தேர்தலுக்காக வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.
நேற்று அதிகாலை 12.30 மணி அளவில் தம்பதி வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தனர். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் தம்பதி வீட்டின் அருகே வந்து நின்றனர். பின்னர் அவர்களில் ஒருவர் திடீரென துப்பாக்கியை எடுத்து தம்பதியை நோக்கி 3 ரவுண்ட் சுட்டார்.
இதனை கண்ட தம்பதி உடனடியாக கீழே குனிந்து கொண்டதால் தோட்டா துளைக்காமல் அதிர்ஷ்டவசமாக அவர்கள் உயிர்தப்பினர். இதற்கிடையே துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு கூடியதால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரும் உடனடியாக தப்பிச்சென்றனர்.
இது பற்றி தம்பதி போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து தேர்தலில் போட்டி காரணமாக தம்பதியை கொலை செய்ய முயற்சி நடந்ததா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.