சிவசேனாவின் சாம்னா பத்திரிகையில் பிரதமர் மோடி பற்றி கீழ்தரமாக விமர்சிப்பதை நிறுத்துங்கள் ராஷ்மி தாக்கரேக்கு, பா.ஜனதா வலியுறுத்தல்

சிவசேனாவின் சாம்னா பத்திரிகையில் பிரதமர் மோடி பற்றி கீழ்தரமான மொழியை பயன்படுத்தி எழுதுவதை நிறுத்துமாறு ராஷ்மி தாக்கரேக்கு, மாநில பா.ஜனதா தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் வலியுறுத்தி உள்ளார்.

Update: 2021-01-03 22:36 GMT
மும்பை, 

சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவின் ஆசிரியராக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயின் மனைவி ராஷ்மி தாக்கரே உள்ளார். நிர்வாக ஆசிரியராக மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் ராவத் உள்ளார்.

இந்தநிலையில் சாம்னாவில் பிரதமர் மோடி மற்றும் பா.ஜனதா தலைவர்களை விமர்சிப்பதில் கீழ்தரமான மொழி பயன்படுத்தப்படுவதாக மராட்டிய பா.ஜனதா குற்றம் சாட்டி உள்ளது.

இதுகுறித்து பா.ஜனதா மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், ராஷ்மி தாக்கரேக்கு கடிதம் எழுதி தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

பிரதமர் மோடி மற்றும் இதர பா.ஜனதா தலைவர்கள் பற்றி சாம்னாவில் பயன்படுத்தும் தவறான, கீழ்த்தரமான மொழி சரியானது அல்ல. இவ்வாறு எழுதுவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதே எனது வேண்டுகோள். சாம்னாவின் ஆசிரியராக, உங்கள் வெளியீட்டில் பயன்படுத்தப்படும் இந்த மொழிக்கு நீங்கள் தான் பொறுப்பு. நான் உங்களை தனிப்பட்ட முறையில் அறிவேன், அத்தகைய மொழி கூட உங்களுக்கு பிடிக்கவில்லை என்று நம்புகிறேன்.

அதே நேரத்தில் இதுபோன்ற மொழியை பயன்படுத்துவது உங்களுக்கு சரியென பாட்டால், நீங்கள் அதனை தொடர்ந்து செய்யுங்கள்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்