வரும் சட்டசபை பொதுதேர்தலில் பா.ஜனதா 140 இடங்களில் வெற்றி பெற திட்டம் செயற்குழு சிறப்பு கூட்டத்தில் எடியூரப்பா பேச்சு
அடுத்து வரும் கர்நாடக சட்டசபை பொது தேர்தலில் 140 இடங்களில் பா.ஜனதா வெற்றி பெற திட்டமிடப்பட்டுள்ளதாக செயற்குழு சிறப்பு கூட்டத்தில் எடியூரப்பா பேசினார்.
சிவமொக்கா,
சிவமொக்கா நகரில் பா.ஜனதா கட்சியின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம், செயற்குழு சிறப்பு கூட்டம் நடந்தது. 2-வது நாளான நேற்று செயற்குழு சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தை மாநில பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
பின்னர் இந்த கூட்டத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா பேசியதாவது:-
கர்நாடகத்தில் அடுத்து வரும் சட்டசபை பொதுதேர்தலில் பா.ஜனதா 140 இடங்களில் வெற்றி பெற திட்டம் தீட்டப்பட்டுள்ளது. அந்த பொதுதேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று பா.ஜனதா தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும். இதற்காக மாநிலம் முழுவதும் மந்திரிகள் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்ய உள்ளனர். விவசாயிகளின் துயரை துடைக்க மாநிலம் முழுவதும் நான் சுற்றுப்பயணம் செய்ய உள்ளேன்.
அந்த சுற்றுப்பயணத்தின்போது விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்பேன். பா.ஜனதா விவசாயிகளுக்கான கட்சி. நாங்கள் எப்போதும் விவசாயிகளுக்கு ஆதரவாக தான் செயல்படுவோம். விவசாயிகளுக்கு எதிராக உள்ள கஸ்தூரி ரங்கன் அறிக்கையை செயல்படுத்த மாட்டோம்.
மாநிலத்தில் காலியாக உள்ள நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். கோர்ட்டு உத்தரவுபடியே மாநிலத்தில் கிராம பஞ்சாயத்து தலைவர், துணைத்தலைவர் பதவிகளுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும்.
பிரதமர் மோடி உலகிலேயே சக்தி வாய்ந்த தலைவராக விளங்குகிறார். நான் கோவில்களுக்கு செல்லும் போதெல்லாம் மோடி நீண்ட நாள் வாழ இறைவனை வேண்டுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த செயற்குழு சிறப்பு கூட்டத்தில் மத்திய மந்திரிகள் பிரகலாத் ஜோஷி, சதானந்தகவுடா, துணை முதல்-மந்திரி கோவிந்த் கார்ஜோள், கட்சியின் மாநில மேலிட பொறுப்பாளர் அருண்சிங், பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல், அரவிந்த் லிம்பாவளி உள்பட பலர் கலந்துகொண்டனர்.