அ.தி.மு.க.ஆட்சியை நிராகரிக்க தயாராவோம் - தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு

அ.தி.மு.க. ஆட்சியை நிராகரிக்க தயாராவோம் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பெருமாநல்லூரில் நேற்று பேசினார்.

Update: 2021-01-03 18:04 GMT
திருப்பூர்,

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் ஒன்றியம் தேவராயபுரம் ஊராட்சியில் மக்கள் கிராம சபை கூட்டத்தில் கலந்துகொண்டார். பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் ஒன்றியத்தில் சிறுவலூர் ஊராட்சியில் மக்கள் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் வழியாக சென்றார்.

மதியம் 2 மணி அளவில் பெருமாநல்லூரில் குன்னத்தூர் சாலை பிரிவில் தி.மு.க. திருப்பூர் மத்திய மாவட்டத்தின் சார்பில் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட பொறுப்பாளர் க.செல்வராஜ் தலைமை தாங்கினார். தெற்கு மாநகர பொறுப்பாளர் டி.கே.டி.மு.நாகராஜன், வடக்கு மாநகர பொறுப்பாளர் தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காரில் நின்றபடியே மு.க.ஸ்டாலின் தொண்டர்களை பார்த்து உற்சாகமாக கையசைத்தார். கட்சி நிர்வாகிகள் சால்வை கொடுத்து அவரை வரவேற்றனர்.

பின்னர் காரில் நின்றபடியே மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

தி.மு.க. ஆட்சிக்கட்டிலில் அமர இன்னும் 4 மாதங்களே இருக்கிறது. கொள்ளையடித்துக்கொண்டிருக்கும் எடப்பாடி ஆட்சிக்கு முடிவு கட்டுவதற்கு இன்னும் 4 மாதங்கள் தான் இருக்கிறது. ஊழல் செய்து கொண்டிருக்கக்கூடிய உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு கெடு இன்னும் 4 மாதம் தான். அதற்கு நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?. அ.தி.மு.க. ஆட்சியை நிராகரிக்க தயாராவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் ‘நிராகரிப்போம், நிராகரிப்போம் அ.தி.மு.க. வை நிராகரிப்போம், ஆதரிப்போம், ஆதரிப்போம், தி.மு.க.வை ஆதரிப்போம்’ என்று மு.க.ஸ்டாலின் கோஷம் எழுப்ப, கூடியிருந்த தொண்டர்களும் அதுபோல் கோஷம் எழுப்பினார்கள். அதன்பிறகு அனைவருக்கும் நன்றியை தெரிவித்து விட்டு மு.க.ஸ்டாலின் அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. கோவிந்தசாமி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தங்கராஜ், துணை அமைப்பாளர் எம்.எஸ்.ஆர்.ராஜ், பகுதி செயலாளர்கள் ராமதாஸ், ஜோதி, வர்த்தக அணி அமைப்பாளர் எம்.எஸ்.மணி, துணை அமைப்பாளர் முருகேசன், சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் ஜான் வல்தாரீஸ், மாநகர பொறுப்புக்குழு உறுப்பினர் ஜெ.முத்துசரவணன், நிர்வாகிகள் ராஜ்மோகன் குமார், கணக்கம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகசுந்தரம் உள்பட திரளானவர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்