குண்டடம் அருகே நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்: தொழில் போட்டி காரணமாக காரை ஏற்றி பெண் கொடூரக்கொலை - வெறிச்செயலில் ஈடுபட்ட மளிகை கடைக்காரர் கைது
குண்டடம் அருகே காரை ஏற்றி பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். தொழில் போட்டி காரணமாக இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட மளிகை கடைக்காரரை போலீசார் கைது செய்தனர். இந்த கொலை குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-;
குண்டடம்,
திருப்பூர் மாவட்டம் குண்டடத்தை அடுத்துள்ள தும்பலப்பட்டியை சேர்ந்தவர் கருப்புசாமி. இவரது மனைவி லட்சுமி (55). கருப்புசாமி ஏற்கனவே இறந்து விட்டதால், அவர் தும்பலப்பட்டியில் நடத்தி வந்த மளிகைக் கடையை லட்சுமி தொடர்ந்து நடத்தி வந்தார். இவர் தனது கடைக்கு தேவையான பொருட்களை, வாரம்தோறும் சனிக்கிழமை குண்டடத்தில் நடைபெறும் வாரச்சந்தைக்கு மொபட்டில் சென்று வாங்கி வருவார்.
இந்த நிலையில் இவருடைய கடையையொட்டி அதே ஊரை சேர்ந்த மயில்சாமி என்பவரும் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் நடத்தி வரும் மளிகை கடையில் வியாபாரம் குறைவாகவும், லட்சுமி நடத்தி வந்த மளிகை கடையில் வியாபாரம் அதிகமாக இருந்தது. இதனால் மயில்சாமி அடிக்கடி லட்சுமியிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இவர்கள் 2 பேருக்கும் தொடர்ந்து முன் விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று காலை 10 மணிக்கு பொருட்கள் வாங்க மொபட்டில் குண்டடம் சந்தைக்கு லட்சுமி சென்றார். பின்னர் கடைக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு தும்பலப்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்தார். குண்டடம்-கோவை ரோட்டில் ருத்ராவதி அருகே லட்சுமி வந்தபோது, அவருக்கு பின்னால் கார் ஒன்று வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் அந்த கார், லட்சுமி ஓட்டிச்சென்ற மொபட் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த லட்சுமி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது பற்றிய தகவல் அறிந்ததும் குண்டடம் போலீசார் விரைந்து சென்று, லட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விபத்தை ஏற்படுத்திய கார் யாருடையது என்று விசாரித்தனர். விசாரணையில் விபத்தை ஏற்படுத்திய கார், லட்சுமியின் கடை அருகே மற்றொரு மளிகை நடத்தி வரும் மயில்சாமி என்பவருக்கு சொந்தமானது என்றும், காரை மயில்சாமியே ஓட்டி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து சந்தேகத்தின் பேரில் மயில்சாமியை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில், தொழில் போட்டி காரணமாக லட்சுமி மீது மயில்சாமி தீராத ஆத்திரத்தில் இருந்துள்ளார். அவரை தீர்த்துக்கட்ட நேரத்தை எதிர்பார்த்து காத்திருந்தார். இந்த நிலையில் நேற்று குண்டடம் வாரச்சந்தை என்பதால், அங்கு பொருட்களை வாங்கிக்கொண்டு மொபட்டில் லட்சுமி வந்ததும், அவரை பின் தொடர்ந்து மயில்சாமி, தனது காரில் வந்துள்ளார். லட்சுமியின் மொபட் ருத்ராவதி பகுதியில் வந்தபோது, மயில்சாமி தனது காரை வேகமாக ஓட்டி சென்று லட்சுமி மீது மோதி அவரை திட்டமிட்டு கொலை செய்ததும் விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து குண்டடம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து மயில்சாமியை கைது செய்தனர். அவர் பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதற்கிடையில் கொலை நடந்த இடத்திற்கு திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷாமித்தல், தாராபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயராம், குண்டடம் இன்ஸ்பெக்டர் சுரேஷ் ஆகியோர் சென்று பார்வையிட்டனர்.
குண்டடம் அருகே தொழில்போட்டியில் பெண்ணை, மளிகைக் கடைக்காரர் காரை ஏற்றி கொலை செய்த சம்பவம் நெஞ்சை பதற வைத்துள்ளது.