அனுமதியை ரத்து செய்யக்கோரி தனியார் கேளிக்கை விடுதி முற்றுகை - அனைத்து கட்சியினர் போராட்டம்
தனியார் கேளிக்கை விடுதி அனுமதியை ரத்து செய்யக்கோரி தனியார் கேளிக்கை விடுதியை அனைத்து கட்சியினர் முற்றுகையிட்டனர்.
திருப்பூர்,
திருப்பூர் காலேஜ் ரோட்டில் தனியார் கேளிக்கை விடுதி கடந்த மாதம் 31-ந் தேதி திறக்கப்பட்டுள்ளது. வாகன போக்குவரத்து அதிகமுள்ள காலேஜ் ரோட்டில் மருத்துவமனை, கோவில், மசூதி மற்றும் குடியிருப்புகள் உள்ளன.
இந்த கேளிக்கை விடுதியால் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் என்று கூறி அப்பகுதியை சேர்ந்த அ.தி.மு.க., பா.ம.க., பா.ஜ.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகள், த.மு.மு.க. கட்சியினர் நேற்று காலை 11.30 மணி அளவில் சம்பந்தப்பட்ட அந்த கேளிக்கை விடுதி முன்பு திரண்டனர்.
விடுதியை முற்றுகையிட்டு விடுதிக்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் திருப்பூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து வந்தனர்.
தனியார் கேளிக்கை விடுதி மாவட்ட நிர்வாகத்தின் உரிய அனுமதி பெற்று செயல்படுவது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கலெக்டரை சந்தித்து மனு எழுதி கொடுத்து முறையிட போலீசார் கூறியதை தொடர்ந்து அனைத்து கட்சியினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.