ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் பனங்கிழங்கு அறுவடை பணி தீவிரம் - விற்பனை மந்தம்
ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் பனங்கிழங்கு அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆனால் விற்பனை மந்தமாக உள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர், மம்சாபுரம், செண்பகத்தோப்பு, ராஜபாளையம் ஆகிய பகுதிகளில் பனைமரங்கள் அதிகமாக உள்ளன.
மேலும் ஆண்டாள் கோவிலுக்கு சொந்தமான சாலியன் தோப்பு பகுதிகளில் ஆயிரக்கணக்கான பனை மரங்கள் ஒரே இடத்தில் உள்ளன.
ஆதலால் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் பனை ஏறும் தொழிலாளர்கள் அதிக அளவில் உள்ளனர்.
இந்த பனை மரங்கள் அவர்களுக்கு நல்ல வருமானமும், வேலை வாய்ப்பையும் பெற்று தருகிறது.
பனங்கிழங்கு, நுங்கு, பதநீர், கருப்பட்டி என பனை மரத்தில் இருந்து கிடைக்கும் அனைத்து பொருட்களும் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
இந்தநிலையில் தை பொங்கலுக்கு கிடைக்கும் வகையில் இந்த பகுதியில் அதிக அளவில் பனங்கிழங்கு போடப்பட்டு இருந்தது. கிழங்குகள் அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த கிழங்குகளை தற்போது விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.
இங்குள்ள கிழங்குகள் சேலம், மதுரை, விருதுநகர் மாவட்டம் என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இதுகுறித்து வியாபாரி சந்தனகாளை கூறியதாவது:-
தை மற்றும் மாசி மாதம் கிடைக்கக்கூடிய இந்த பனங்கிழங்கில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. மேலும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் திறனும் இ்ந்த கிழங்கிற்கு உண்டு. எனவே மருத்துவ குணம் வாய்ந்த இந்த கிழங்கை அனைவரும் வாங்கி செல்கின்றனர்.
ஒரு கட்டு பனங்கிழங்கு (எண்ணம்25) ரூ.130 முதல் ரூ.250 வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு பனங்கிழங்கு வழக்கத்தை காட்டிலும் நிறைய இடங்களில் போடப்பட்டதால் தற்போது வரத்து அதிகரித்து உள்ளது.
நாங்கள் எதிர்பார்த்த அளவிற்கு இல்லாமல் விற்பனை மந்தமாக உள்ளது. தற்போது ஒரு கட்டு ரூ.110 முதல் ரூ. 150 வரை விற்கப்படுகிறது. பொங்கலையொட்டி விற்பனையும், விலையும் அதிகரிக்கும் என நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.