மோகனூர் அருகே, தொழிலாளி கழுத்தை அறுத்து கொலை - 3 பேருக்கு போலீசார் வலைவீச்சு

மோகனூர் அருகே கழுத்தை அறுத்து கூலித்தொழிலாளி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

Update: 2021-01-03 16:40 GMT
மோகனூர்,

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள ஒருவந்தூரை சேர்ந்த முருகேசன் என்பவரது மகன் சசிகுமார் (வயது 24). இவர் கரூர் அருகே உள்ள ஒரு காகித ஆலையில் தினக்கூலியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு 2 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி, பானுமதி (20) என்ற மனைவி உள்ளார். தற்போது இவர் 5 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இவரது சகோதரியை அதே ஊரை சேர்ந்த மலர்மன்னன் (35) என்ற டிரைவர் கேலி, கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதை தட்டிக்கேட்ட சசிகுமாருக்கும், மலர்மன்னனுக்கும் அடிதடி தகராறு ஏற்பட்டுள்ளது. அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்தனர். இருந்தாலும் மலர்மன்னன் கடந்த 2 ஆண்டுகளாக சசிகுமாரை பழிதீர்க்க காத்திருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் புத்தாண்டன்று இரவு 7.30 மணிக்கு மோகனூர் ரெயில் நிலையம் பின்புறம் சசிகுமாரை, மலர்மன்னன் வரவழைத்தார். அங்கு சசிகுமார் சென்றபோது மலர்மன்னன், அவரது நண்பர்களான டிரைவர்கள் ரஞ்சித் (27), பிரகாஷ் (24) ஆகியோருடன் இருந்தார். அப்போது திடீரென மலர்மன்னன் தன்னிடம் இருந்த பீர் பாட்டிலால் சசிகுமார் தலையில் தாக்கியுள்ளார். உடன் இருந்த பிரகாசும் சேர்ந்து தாக்கி உள்ளார். தொடர்ந்து ரஞ்சித் தன்னிடம் இருந்த கத்தியால் சசிகுமாரின் கழுத்தை அறுத்துள்ளார்.

இதில் ரத்த வெள்ளத்தில் துடித்த சசிகுமாரை அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இது தொடர்பாக சசிகுமாரின் தந்தை முருகேசன் மோகனூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான மலர்மன்னன், ரஞ்சித், பிரகாஷ் ஆகிய 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்