வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பொங்கல் பரிசு வழங்க ரூ.264 கோடி நிதி ஒதுக்கீடு - நாளை முதல் வினியோகம் தொடக்கம்

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்க ரூ.2 ஆயிரத்து 500 வழங்க ரூ.264 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-01-03 12:25 GMT
வேலூர்,

பொங்கல் பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.2 ஆயிரத்து 500 ரொக்கப்பணம் பொங்கல் பரிசாக வழங்கப்படும் என தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். மேலும் சர்க்கரை, முந்திரி, திராட்சை போன்ற பொருட்கள் அடங்கிய தொகுப்பும், முழு கரும்பு ஒன்றும் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

அதன்படி வேலூர் மாவட்டத்தில் உள்ள 4 லட்சத்து 21 ஆயிரத்து 339 ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக வீடு, வீடாக டோக்கன் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

வேலூர் தொரப்பாடியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் பரிசு தொகுப்புகள் பைகளில் பேக்கிங் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 10 லட்சத்து 57 ஆயிரத்து 245 ரேஷன் கார்டுகளுக்கு ரூ.2 ஆயிரத்து 500 மற்றும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது. 3 மாவட்டத்திலும் ரேஷன்அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.2 ஆயிரத்து வழங்க ரூ.264 கோடியே 35 லட்சத்து 22 ஆயிரத்து 500 அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் முழுக் கரும்பு வழங்க லாரிகளில் கரும்பு லோடுகள் நேற்று வேலூர் மாவட்டத்திற்கு வந்தது. காட்பாடி தாலுகா பகுதியில் வினியோகிப்பதற்கான கரும்புகள் நேற்று காந்தி நகர் பகுதிக்கு லாரிகளில் கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து மினி லாரிகள் மூலம் ரேஷன் கடைகளுக்கு பிரித்து அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.

இது குறித்து கூட்டுறவுதுறை அதிகாரிகள் கூறுகையில், நாளை (திங்கட்கிழமை) முதல் பொங்கல் பரிசு தொகுப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும். அவர்களுக்கு வழங்கப்பட்ட டோக்கன்களில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தின்படி ரேஷன் அட்டைதாரர்கள் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம் என்றனர்.

கலெக்டர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொங்கல் பரிசு தொகுப்பு பெறும் நபர் முககவசம் அணிந்து, ஒரு மீட்டர் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். இவற்றை மேற்பார்வை செய்யும்பொருட்டு ஒவ்வொரு ரேஷன்கடைகளிலும் ஒரு ஆசிரியர், பொதுமக்களில் ஒரு தன்னார்வலர் என்று 2 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தன்னார்வலர்கள் அரசின் விதிமுறைகளை குடும்ப அட்டைதாரர்கள் பின்பற்றுகிறார்களா என்றும், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறதா என்றும் கண்காணிப்பார்கள். மேலும் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிக்கு தெரிவிக்கும்படி அவர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்