2020-ம் ஆண்டில் மாவட்டம் முழுவதும் 238 குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம் - விழிப்புணர்வு ஏற்படுத்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

2020-ம் ஆண்டில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 238 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

Update: 2021-01-03 09:58 GMT
திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை 238 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளது. இதில் 58 குழந்தைகளுக்கு திருமணம் நடந்து முடிந்த பிறகு தடுக்கப்பட்டு உள்ளது.

குழந்தைகள் உதவி மையம், மாவட்ட சமூக நலத்துறை மூலமாக குழந்தை திருமணம் தடுப்பது குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறும் குழந்தை திருமணங்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து கொண்டே வருகிறது.

கொரோனா ஊரடங்கு காலத்தில் சத்தமின்றி ஏராளமான குழந்தை திருமணங்கள் நடைபெற்று உள்ளது. 238 குழந்தை திருமணங்கள் என்பது அதிகாரிகள் தரப்பில் கூறப்படுவது தான். ஆனால் கணக்கில் வராமல் எத்தனை குழந்தை திருமணங்கள் நடந்ததோ என்று தெரியவில்லை.

மாவட்டத்தில் குழந்தை திருமணம் குறித்து விழிப்புணர்வு குறைவால் இதுபோன்ற திருமணங்கள் நடைபெறுகிறதா என்றும் தெரியவில்லை. எனவே, இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு இந்த ஆண்டிலாவது குழந்தை திருமணங்கள் நடைபெறுவதை குறைக்க அதிகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்