நள்ளிரவில் விபத்து: மோட்டார் சைக்கிள் மீது டெம்போ மோதல்; மாணவர் பலி டிரைவர் கைது

ஆரல்வாய்மொழி அருகே மோட்டார் சைக்கிள் மீது டெம்போ மோதி பிளஸ்-1 மாணவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

Update: 2021-01-03 03:50 GMT
ஆரல்வாய்மொழி,

ஆரல்வாய்மொழி கிறிஸ்துநகர் பகுதியைச் சேர்ந்தவர் பொன்பாக்கிய தீபா (வயது 39). அங்கன்வாடியில் வேலை செய்து வருகிறார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இவருடைய கணவர் 5 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.

இதில் மூத்த மகன் அபிஷேக் (16). இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

பலி

இந்தநிலையில் நேற்று முன்தினம் வில்லவிளை பகுதியில் உள்ள ஆலயத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் நிகழ்ச்சி முடிந்த பின்னர் நள்ளிரவு 11.30 மணி அளவில் அபிஷேக் தனது நண்பனின் மோட்டார் சைக்கிளை வாங்கிக்கொண்டு ஆரல்வாய்மொழியில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

முத்துநகர் அருகே சென்ற போது, அந்த வழியாக வந்த டெம்போ அபிஷேக் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

டிரைவர் கைது

இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த ஆரல்வாய்மொழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அபிஷேக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து டெம்போவை ஓட்டிவந்த ஈத்தாமொழியை சேர்ந்த சேகர் என்பவரை போலீசார் கைது செய்தனர். விபத்தில் மாணவன் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்