திருச்சி முதலியார் சத்திரத்தில் பராமரிப்பின்றி கிடக்கும் ரெயில்வே குட்செட் யார்டு

திருச்சி முதலியார் சத்திரத்தில் ரெயில்வே குட்செட் யார்டு உள்ளது. தமிழகத்தில் சரக்கு ரெயில்கள் மூலம் சரக்கு கையாள்வதில் திருச்சி முதலியார் சத்திரம் குட்செட் யார்டு முக்கிய பங்கு உண்டு.

Update: 2021-01-03 01:25 GMT
திருச்சி,

தமிழகத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளதால், வெளிமாநிலங்களில் இருந்து சரக்கு ரெயில் வேகன்கள் மூலம் அத்தியாவசிய பொருட்களான அரிசி, கோதுமை, பருப்பு உள்ளிட்ட வர்த்தக பொருட்கள் அடிக்கடி வருவதுண்டு.

பராமரிப்பின்றி யார்டுகள்

மேலும் தொழிற்சாலைகளுக்கான இரும்பு தளவாடங்கள், இரும்பு ரோல்கள், ஆண்டுக்கு இருமுறை ராணுவத்திற்கு தேவையான தளவாடங்கள், ஏனைய கருவிகள் திருச்சி குட்செட் யார்டுகளில் இறக்கப்பட்டு, லாரிகள் மூலம் உரிய இடத்திற்கு கொண்டு செல்லப்ப டுகிறது.

இப்படி, முக்கியத்துவம் வாய்ந்த யார்டு, சரிவர பராமரிப்பின்றி தண்டவாளப்பகுதியில் புற்கள் முளைத்தும், மழைநீர் தேங்கியும் கிடக்கிறது. மேலும் யார்டு பகுதியில் இரும்பு தளவாடங்கள் இறக்கி ஏற்றுவதற்காக குட்செட்டின் நுழைவு பகுதியில் 3 யார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

அங்குள்ள யார்டு பகுதி பராமரிப்பின்றியும், சாலைகள் குண்டும், குழியுமாகவும் காட்சி அளிக்கிறது. தினமும் யார்டில் சரக்கு உள்ளிட்ட பாரங்களை ஏற்றிக்கொண்டு வாகனங்கள் செல்வதால் சாலைகள் பழுதாகி விடுகின்றன. இது குறித்து சுமைதூக்கும் தொழிலாளர்கள் கூறியதாவது:-

பாம்புகள் நடமாட்டம்

முதலியார் சத்திரம் குட்செட் யார்டில் இரும்பு உள்ளிட்ட தளவாட பொருட்கள் இறக்குவதற்காக 3 ரெயில்வே தண்டவாளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் தற்போது 2 தண்டவாளப் பகுதிதான் செயல்பாட்டில் உள்ளது.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு போராட்டத்திற்கு பின்னரே அவை பராமரிக்கப்பட்டன.

தற்போது மீண்டும் தண்டவாளம் அமைந்துள்ள யார்டு பகுதி மிகவும் மோசமாக உள்ளது. புற்கள் அதிகமாக முளைத்திருப்பதால் பாம்புகள் சர்வசாதாரணமாக உலா வருகின்றன.

சமீபத்தில் கொடிய விஷம் கொண்ட கண்ணாடி விரியன் பாம்பு ஒன்றை கண்டு அதிர்ச்சி அடைந்தோம். பின்னர், அதை அடித்து அங்கிருந்து அப்புறப்படுத்தினோம்.

தரமான தார்சாலை

மேலும் யார்டில் இருந்து இரும்பு பாரங்களை ஏற்றிக்கொண்டு டிரைலர் லாரிகள் செல்லும் நுழைவு பாதை சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. நேற்றைய தினம், மத்திய அரசின் செய்ல் நிறுவனத்தில் இருந்து 780 டன் இரும்பு ரோல்கள் 13 வேகன்களில் வந்தது.

அவற்றில் ஏற்றிக்கொண்டு தோகைமலைக்கு சென்ற லாரியின் சக்கரங்கள் சேற்றில் சிக்கி 3 மணிநேர போராட்டத்திற்கு பின்னரே மீட்க முடிந்தது. எனவே, அங்கு தரமான தார்சாலை அமைத்து கொடுக்க ரெயில்வே நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்