விடுதலை சிறுத்தைகள் கட்சி தனி சின்னத்தில் தான் போட்டியிடும் தொல்.திருமாவளவன் எம்.பி. அறிவிப்பு
சட்டமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தனி சின்னத்தில்தான் போட்டியிடும் என்று தொல்.திருமாவளவன் எம்.பி. கூறினார்.
புதுச்சேரி,
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. நேற்று முதல்-அமைச்சர் நாராயணசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது புதுவையில் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவர்கள் தொழில்நுட்ப படிப்புகள் வரை படிப்பதற்கு கல்விக்கட்டணத்தை அரசே செலுத்தும் என்ற உத்தரவுக்கு நன்றி தெரிவித்தார்.
இந்த சந்திப்பின்போது அமைச்சர் கந்தசாமி, ரவிக் குமார் எம்.பி., விடுதலை சிறுத்தைகளின் முதன்மை செயலாளர் தேவ.பொழிலன் ஆகியோர் உடனிருந்தனர்.
இதன்பின் நிருபர்களிடம் தொல்.திருமாவளவன் எம்.பி. கூறியதாவது:-
புதுவையில் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவர்கள் ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி படிப்பு வரை படிக்க இலவச கல்வி என்று மாநில அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இந்தியாவிலேயே முன்னோடி திட்டம் இது. இதற்காக முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
வருகிற சட்டமன்ற தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் சனாதன சக்திகளை கால் ஊன்ற விடாமல் இருக்க உறுதியேற்போம். இந்த ஆண்டு அதற்கான ஆண்டாக மலரும்.
தி.மு.க. கூட்டணி மீது குற்றம் சுமத்த முடியாதவர்கள் வாரிசு அரசியல் என்று பேசிவருகிறார்கள். வருகிற சட்டமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தனிச்சின்னத்தில்தான் போட்டியிடும். இவ்வாறு அவர் கூறினார்.