சென்னையில் வேலை செய்த வீட்டில் கள்ளச்சாவி போட்டு 30 பவுன் நகையை திருடிய டிரைவர்

வேலை செய்த வீட்டில் கள்ளச்சாவி போட்டு கதவை திறந்து, 30 பவுன் நகையை திருடிய டிரைவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-01-02 23:08 GMT
ராஜகோபால்
30 பவுன் நகை மாயம்
சென்னையை அடுத்த துரைப்பாக்கம் ஒக்கியம்பேட்டையை சேர்ந்தவர் ரமேஷ்குமார். இவரிடம் கடந்த 1½ ஆண்டுகளாக காரைக்குடி சாகவாயல் பகுதியை சேர்ந்த ராஜகோபால் (வயது 33) என்பவர் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். அதன்பிறகு திடீரென அவர் வேலையில் இருந்து நின்றுவிட்டார்.

இந்த நிலையில் தனது வீட்டில் 30 பவுன் நகைகள் மாயமாகி இருந்ததை கண்டு ரமேஷ்குமார் அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி துரைப்பாக்கம் கண்ணகிநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

கள்ளச்சாவி
ரமேஷ்குமார் வீட்டில் ஏற்கனவே வேலை செய்து வந்ததால் சந்தேகத்தின்பேரில் திருப்போரூர் பகுதியில் இருந்த ராஜகோபாலை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் ரமேஷ்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டில் இல்லாத நேரத்தில் ராஜகோபால், கள்ளச்சாவி போட்டு கதவை திறந்து உள்ளே புகுந்து நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டார்.

அவரை போலீசார் கைது செய்தனர். அந்த நகைகளை விற்று அதில் கிடைத்த பணத்தில் வாங்கிய காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான ராஜகோபால் சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்