பெங்களூருவில் திருட்டு வழக்கில் உ.பி.யை சேர்ந்த 2 பேர் கைது ரூ.2¼ கோடி நகைகள் மீட்பு
பெங்களூருவில் திருட்டு வழக்கில் உத்தர பிரதேசத்தை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2¼ கோடி மதிப்பிலான தங்கநகைகள் மீட்கப்பட்டு உள்ளன.
பெங்களூரு,
பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் கமல்பந்த் நேற்று தனது அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
பெங்களூரு நகரில் இரவு நேரங்களில் பூட்டியிருக்கும் வீடுகளை குறிவைத்து ஒரு கும்பல் நகைகள், பணம், வெள்ளி பொருட்களை திருடி சென்றது. மேலும் வீடுகளில் இருப்பவர்களை தாக்கியும் கொள்ளை சம்பவமும் நடந்து இருந்தது. திருட்டு, கொள்ளை தொடர்பாக சஞ்சய்நகர், அன்னபூர்னேஸ்வரி நகர், அம்ருதஹள்ளி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவாகி இருந்தன.
திருட்டு, கொள்ளையில் ஈடுபடும் மர்மநபர்களை பிடிக்க மத்திய குற்றப்பிரிவு துணை போலீஸ் கமிஷனர் ரவிக்குமார் தலைமையில் தனிப்படையும் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் பெங்களூருவில் திருட்டு, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது உத்தரபிரதேச மாநிலம் முசாராபாத்தை சேர்ந்த கும்பல் என்று தெரிந்தது.
இதையடுத்து கொள்ளை கும்பலை கைது செய்ய மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹசரேஷ் தலைமையிலான குழுவினர் உத்தர பிரதேச மாநிலத்திற்கு சென்று இருந்தனர். அங்கு 7 நாட்கள் தங்கி இருந்த போலீசார் கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள் நடவடிக்கைகளை கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் பெங்களூருவில் திருடிய நகைகளை முசாராபாத்தில் உள்ள ஒரு நகைக்கடையில் விற்பனை செய்ய ஒருவர் வருவதாக, தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அந்த நகைக்கடைக்கு மாறுவேடத்தில் சென்ற போலீசார் அங்கு நகைகளை விற்க வந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவரது பெயர் பாகீம் என்கிற ஏ.டி.எம்.பாகீம் (வயது 35) என்பது தெரியவந்தது. அவரிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அவர் தனது கூட்டாளியான சலீம் முகமது என்கிற சலீம் (42) என்பவருடன் சேர்ந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரிந்தது. இதையடுத்து பாகீமை போலீசார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில் சலீம் முகமதுவும் கைது செய்யப்பட்டார்.
கைதான பாகீம் மீது உத்தரபிரதேச மாநிலத்தில் கொலை, கொள்ளை உள்பட 40 வழக்குகள் உள்ளன. அவரை பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.10 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என்று கடந்த 2016-ம் ஆண்டு உத்தர பிரதேச மாநில அரசு அறிவித்து இருந்தது. ஆனாலும் அவர் யார் கண்ணிலும் சிக்காமல் இருந்து வந்து உள்ளார். 2017-ம் ஆண்டு திருட்டு வழக்கில் ஒன்றில் அரியானா போலீசாரால் கைது செய்யப்பட்டு இருந்த பாகீம், குருகிராமில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அப்போது சிறையில் அவருக்கு பிரபல கொள்ளையான அசோக் லாட்டி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருந்தது. பின்னர் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த பாகீம், சிறையில் இருந்தபடியே அசோக் லாட்டி கொடுத்த தகவல் மூலம் தனது கூட்டாளியான சலீம் முகமதுவுடன் சேர்ந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு உள்ளார்.
இவர்கள் 2 பேரும் சேர்ந்து பெங்களூரு, பெலகாவி, கோவா, ஐதராபாத், உத்தர பிரதேசம், அரியானா, டெல்லி ஆகிய பகுதிகளில் திருட்டு, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்து உள்ளனர். கைதான 2 பேரும் கொடுத்த தகவலின்பேரில் பாகீம் மற்றும் அவரது சகோதரியின் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 4 கிலோ 35 கிராம் தங்கநகைகளை போலீசார் மீட்டனர். அவற்றின் மொத்த மதிப்பு ரூ.2 கோடியே 25 லட்சம் ஆகும். கைதான 2 பேரையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் பெங்களூருவுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
இவர்கள் 2 பேரும் கைதாகி இருப்பதன் மூலம் சஞ்சய்நகர், கோடிஹள்ளி, அன்னபூர்னேஸ்வரிநகர், பேடரஹள்ளி, நந்தினி லே-அவுட், ராஜகோபால்நகர், கே.ஜி.ஹள்ளி, ஹெப்பால், அம்ருதஹள்ளி, பானசாவடி, ஹைகிரவுண்ட், ஞானபாரதி ஆகிய போலீஸ் நிலையங்களில் பதிவான 35 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது.
கொள்ளையர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகள் பெங்களூரு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்தது. அந்த நகைகளை போலீஸ் கமிஷனர் கமல்பந்த், மத்திய குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல் ஆகியோர் பார்வையிட்டனர். மேலும் கொள்ளை கும்பலை சேர்ந்த 2 பேரை கைது செய்ய மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு ரூ.75 ஆயிரம் ரொக்க பரிசையும் போலீஸ் கமிஷனர் கமல்பந்த் வழங்கினார்.