சென்னையில் நாளை முதல் மின்சார ரெயில் சேவை 660 ஆக அதிகரிப்பு; இரவு 12 மணி வரை இயங்கும்

சென்னையில் நாளை முதல் மின்சார ரெயில் சேவை 660-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், இரவு 12 மணி வரை ரெயில்கள் இயங்கும் எனவும் சென்னை ரெயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

Update: 2021-01-02 22:40 GMT
மின்சார ரெயில்
சென்னையில், கொரோனா தொற்று பரவல் காரணமாக மின்சார ரெயில் சேவை முழுமையாக ரத்து செய்யப்பட்டது. ஆனால் கொரோனா முன்கள பணியாளர்களுக்கு மட்டும் மின்சார ரெயில் சேவை இயக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அத்தியாவசிய பணியாளர்களும் பயணிக்க தெற்கு ரெயில்வே அனுமதி அளித்தது.

பின்னர் தனியார் நிறுவன ஊழியர்கள், பெண்கள், குழந்தைகள், பொது மக்கள் என மின்சார ரெயிலில் பயணிக்க படிப்படியாக அனுமதி வழங்கப்பட்டு, தற்போது வரை 500 மின்சார ரெயில் சேவைகள் சென்னையில் இயக்கப்படுகின்றன. ஆனால் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 410 மின்சார ரெயில் சேவைகளுக்கு மட்டுமே தெற்கு ரெயில்வே அனுமதி அளித்துள்ளது.

660 சேவைகள்
இந்தநிலையில் வருகிற 4-ந்தேதி (நாளை) முதல் மின்சார ரெயில் சேவை 660-ஆக அதிகரித்திருப்பதாக தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் அறிவித்துள்ளது. அதன்படி, கூடுதலாக 160 மின்சார ரெயில் சேவைகள் 4-ந்தேதி முதல் இயக்கப்படுகின்றன. ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் வழக்கம் போல் 410 ரெயில் சேவைகள் இயக்கப்படும் என தெரிவித்துள்ளது.

கடற்கரையில் இருந்து தாம்பரத்துக்கும், தாம்பரத்தில் இருந்து கடற்கரைக்கும் காலையில் முதல் ரெயில் சேவை 3.55 மணிக்கும், கடைசி ரெயில் சேவை இரவு 11.59 மணிக்கும் இயக்கப்படுகிறது. இதேபோல் மூர்மார்க்கெட், வேளச்சேரி, அரக்கோணம், திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் கடைசி ரெயில் சேவை இரவு 10 மணி முதல் 12 மணி வரை இயக்கப்படுகிறது என சென்னை ரெயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்