குன்னூர் பஸ் நிலைய பகுதியில் பேக்கரியின் பின்பக்க சுவர் இடிந்து விழுந்தது - 3 ஊழியர்கள் உயிர் தப்பினர்
குன்னூர் பஸ் நிலைய பகுதியில் பேக்கரியின் பின்பக்க சுவர் இடிந்து விழுந்தது.
குன்னூர்,
குன்னூர் பஸ் நிலையம், டி.டி.கே. சாலை, ஆட்டோ நிலையம் ஆகிய பகுதிகளில் பேக்கரிகள் உள்பட பல்வேறு கடைகள் உள்ளன. இந்த கடைகள் ஆற்றங்கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக தெரிகிறது. அதனை அகற்ற ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி அந்த கடைகளை காலி செய்ய உரிமையாளர்களுக்கு நோட்டீசு வழங்கப்பட்டது. அதன்பின்னர் டி.டி.கே. சாலை, ஆட்டோ நிலையம் ஆகிய பகுதிகளில் முதற்கட்டமாக 42 கடைகள் அகற்றப்பட்டது. ஆனால் பஸ் நிலைய பகுதியில் உள்ள கடைகள் மட்டும் அகற்றப்படவில்லை.
இந்த நிலையில் அங்கிருந்த ஒரு பேக்கரியின் பின்பக்க சுவர் நேற்று மாலை 6 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது. முன்னதாக அங்கு பணியாற்றிய 3 ஊழியர்கள் வெளியே ஓடி வந்தனர். இதனால் அவர்கள் உயிர் தப்பினர்.
குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் அந்த சுவர் வலுவிழந்து, இடிந்து விழுந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பொதுமக்கள் கூட்டம் காணப்படும் பஸ் நிலைய பகுதியில் பேக்கரி பின்பக்க சுவர் இடிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.