புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பரிதாபம்: மாடிப்படியில் இருந்து தவறி விழுந்து என்ஜினீயர் பலி

கோவையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மாடிப்படியில் இருந்து தவறி விழுந்து என்ஜினீயர் பலியானார். இந்த பரிதாப சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

Update: 2021-01-02 09:57 GMT
கோவை,

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மகன் தினேஷ்குமார் (வயது 26). என்ஜினீயரான இவர் கோவை ராமநாதபுரத்தில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கியிருந்து சிங்காநல்லூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தினேஷ்குமார் தான் பணியாற்றும் நிறுவனத்தின் மாடியில் நண்பர்களுடன் புத்தாண்டை கொண்டாடினார். பின்னர் புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்துவிட்டு மாடியில் இருந்து அனைவரும் கீழே இறங்கினர்.

அப்போது தினேஷ்குமார் கால் தவறி மாடிப்படியில் இருந்து கீழே விழுந்தார். இதில் தினேஷ்குமார் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார். அவரை சக நண்பர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், தினேஷ்குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மாடிப்படியில் இருந்து தவறி விழுந்து என்ஜினீயர் பலியான சம்பவம் கோவையில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்