மக்கள் சபை கூட்டத்தில் பங்கேற்க, கரூருக்கு நாளை மு.க.ஸ்டாலின் வருகை; உற்சாக வரவேற்பு அளிக்க தி.மு.க.வினர் ஏற்பாடு
கரூர் வாங்கல் குப்புச்சிபாளையத்தில் நாளை நடைபெறும் மக்கள் சபை கூட்டத்தில் பங்கேற்க மு.க.ஸ்டாலின் வருகை தருகிறார். இதையடுத்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க தி.மு.க.வினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
கரூர் வாங்கல் குப்புச்சிபாளையத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தி.மு.க.சார்பில் மக்கள் சபை கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். இதனையொட்டி அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க கரூர் மாவட்ட தி.மு.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி நாளை ஈரோட்டில் இருந்து கார் மூலம் கரூருக்கு வருகை தரும் மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட எல்லையான நொய்யல் குறுக்கு சாலையில், காலை 11.30 மணியளவில் கரூர் மாவட்ட பொறுப்பாளரும், அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினருமான வி.செந்தில்பாலாஜி தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு
தொடர்ந்து திருக்காம்புலியூர் பைபாஸ் ரவுண்டானா, ரெசிடென்ஸி ஓட்டல், கரூர் பஸ்நிலையம் ரவுண்டானா, வெங்கமேடு அண்ணாசிலை, மண்மங்கலம் பஸ் ஸ்டாப் ஆகிய பகுதிகளில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதனையடுத்து மாலை 4 மணிக்கு வாங்கல் குப்புச்சிபாளையத்தில் நடைபெற உள்ள மக்கள் சபை கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
இதனைத்தொடர்ந்து பாலாம்பாள்புரம், திருமாநிலையூர் ரவுண்டானா, காந்திகிராமம் டபுள் டேங்க், புலியூர் கடைவீதி, கிருஷ்ணராயபுரம் கடைவீதி, குளித்தலை ஆகிய பகுதிகளுக்கும் செல்லும் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.