ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தங்க குதிரையில் வையாளி கண்டருளிய நம்பெருமாள்

ஸ்ரீரங்கம் ரெங்காநாதர் கோவிலில் திருமங்கை மன்னன் வேடுபறி வைபவம் நேற்று மாலை நடைபெற்றது. அப்போது தங்கக்குதிரை வாகனத்தில் நம்பெருமாள் வையாளி கண்டருளினார்.

Update: 2021-01-02 03:53 GMT
தங்கக்குதிரை வாகனத்தில் நம்பெருமாள் வையாளி கண்டருளிய போது எடுத்தபடம்
வைகுண்ட ஏகாதசி விழா
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த மாதம் 14-ந்தேதி திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. கடந்த மாதம் 25-ந்தேதி ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதசி திருநாள் ஆகும். அன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதையொட்டி நம்பெருமாள் ரத்தின அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ராப்பத்து உற்சவத்தின் 7-ம் நாளான நேற்று முன்தினம் நம்பெருமாள் திருக்கைத்தல சேவை நடைபெற்றது.

தங்கக்குதிரை வாகனத்தில் நம்பெருமாள்
ராப்பத்து உற்சவத்தின் 8-ம் நாளான நேற்று திருமங்கை மன்னன் வேடுபறி வைபவம் கோவில் நாலாம் பிரகாரத்தின் கிழக்கில் உள்ள மணல்வெளியில் நடைபெற்றது. அப்போது நம்பெருமாள் தங்கக்குதிரை வாகனத்தில் மணல்வெளியில் ஓடியாடி, வையாளி வகையறா கண்டருளினார். இதையொட்டி மாலை 5 மணிக்கு சந்தனு மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் தங்கக்குதிரை வாகனத்தில் புறப்பட்டு மாலை 5.30 மணிமுதல் மாலை 6 மணிவரை வையாளி வகையறா கண்டருளினார். பின்னர் மாலை 6.30 மணிக்கு திருமாமணி மண்டபம் சென்றடைந்தார்.

தீர்த்தவாரி
அங்கு இரவு 7 மணிமுதல் இரவு 8 மணிவரை அரையர் சேவையுடன், பொதுஜனசேவையும் நடைபெற்றது. இரவு9 மணிக்கு திருமாமணி மண்டபத்தில் இருந்து புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் நம்பெருமாள் இரவு 10 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். விழாவின் 10-ம் திருநாளான நாளை(ஞாயிற்றுக்கிழமை) தீர்த்தவாரியும், 4- ந்தேதி நம்மாழ்வார் மோட்சமும், இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சியுடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் வேணுஸ்ரீனிவாசன், கோவில் இணை ஆணையர் ஜெயராமன், உதவிஆணையர் கந்தசாமி, அறங்காவலர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்