தூத்துக்குடி மாவட்டத்தில் புத்தாண்டை முன்னிட்டு கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

புத்தாண்டை முன்னிட்டு கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

Update: 2021-01-02 02:04 GMT
புத்தாண்டை முன்னிட்டு பிஷப் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் சிறப்பு பிரார்த்தனை
சிறப்பு பிரார்த்தனை
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆங்கில புத்தாண்டு நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. புத்தாண்டை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் நேற்று முன்தினம் இரவு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. தூத்துக்குடி சின்னக்கோவிலில் தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் திருப்பலி நடந்தது.

இதே போன்று தூத்துக்குடி பனிமயமாதா ஆலயத்தில் பங்குதந்தை குமாரராஜா தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. நிகழ்ச்சிகளில் திரளான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.

மேலும் தூத்துக்குடியில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. புத்தாண்டை முன்னிட்டு மக்கள் பட்டாசு வெடித்தும், ஒருவருக்கொருவர் இனிப்புகள் வழங்கியும் வாழ்த்து தெரிவித்தனர். நேற்று காலையிலும் மக்கள் புத்தாடைகள் அணிந்து பல்வேறு கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்தனர்.

கோவில்பட்டி
கோவில்பட்டி புனித சூசையப்பர் ஆலயத்தில் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு நன்றி வழிபாடு, 12 மணிக்கு புத்தாண்டு திருப்பலி நடந்தது. இதனை பங்குத்தந்தை அலோசியஸ் துரைராஜ் தலைமையில் உதவி பங்குதந்தை ஜேக்கப் நடத்தினார். காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா ஆலயத்தில் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு நன்றி மன்றாட்டு நிகழ்ச்சியும், 12 மணிக்கு புத்தாண்டு சிறப்பு திருப்பலியும் பங்குத்தந்தை அந்தோணி குரூஸ், உதவி பங்குத்தந்தை சுதன் ஆகியோரால் நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்

திருச்செந்தூர்
திருச்செந்தூர் ஆலந்தலை இயேசுவின் திரு இருதய அற்புத கெபியில் நேற்று முன்தினம் நள்ளிரவு திருப்பலி நடந்தது. ஆலந்தலை பங்குத்தந்தை ஜெயக்குமார் திருப்பலியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அமலோற்பவ மாதா சபையினர் கும்ப மரியாதை செலுத்தி தந்தையர்களை வரவேற்றனர். திருப்பலியில், உதவி பங்கு தந்தை சாஜூஜோசப், திருத்தொண்டர் ரினோ மற்றும் ஊர்நலக்கமிட்டியினர், அமலோற்பவ மாதா சபையினர் உள்ளிட்ட அனைத்து சபையினர்கள், மீனவர்கள் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். முடிவில் கேக் வெட்டி, இறைமக்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது. பின்னர், போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

அதேபோல் அமலிநகர் அமலி அன்னை ஆலயத்தில் பங்குதந்தை ரவீந்திரன் பர்னாந்து தலைமையிலும், வீரபாண்டியன்பட்டினம் புனித தோமையார் ஆலயத்தில் நள்ளிரவு பங்குதந்தை கிருபாகரன், உதவி பங்குதந்தை வளனரசு ஆகியோர் தலைமையிலும் சிறப்பு திருப்பலி நடந்தது.

அடைக்கலாபுரம் அதிசய ஆரோக்கிய ஆலயத்தில் நள்ளிரவு பங்குதந்தை பீட்டர்பால் தலைமையிலும், திருச்செந்தூர் ஜீவாநகர் புனித அன்னம்மாள் ஆலயத்தில் பங்குதந்தை சகேஷ்சந்தியா தலைமையிலும் சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்