கவர்னரை கண்டித்து 8-ந் தேதி போராட்டம்: எந்த விளைவுகளையும் எதிர்கொள்ள தயார் முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆவேசம்

கவர்னரை கண்டித்து 8-ந் தேதி நடைபெறும் போராட்டத்தால் எந்த விளைவுகளையும் எதிர்கொள்ள தயார் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

Update: 2021-01-02 01:46 GMT
புதுச்சேரி, 

புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

2021-ம் ஆண்டு புதுச்சேரி மக்களுக்கு மகிழ்ச்சியான, வளமான நலம் தரும் ஆண்டாக அமைய வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன். புத்தாண்டு மகிழ்ச்சியோடு ஆரம்பித்துள்ளது. புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டம் இல்லை என சிலர் சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். மாநில அரசு உறுதியான நடவடிக்கை எடுத்து புத்தாண்டை கோலாகலமாக கொண்டாடியுள்ளோம்.

அதன் அடிப்படையில் தான் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் புதுவைக்கு வந்து கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர்.

கடந்த 10 மாதங்களாக கொரோனாவால் அடைபட்டு கிடந்த மக்களுக்கு புத்தாண்டு மகிழ்ச்சி அளித்துள்ளது. தைவான், நியூசிலாந்து, தாய்லாந்து போன்ற பல்வேறு நாடுகளில் புத்தாண்டு கொண்டாடப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகள் இங்கு வந்தால் தான் பொருளாதாரம் வளர்ச்சியடையும். வியாபாரம் பெருகும். வேலைவாய்ப்பு உருவாகும் என்பதற்காக புத்தாண்டு கொண்டாடப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அதேபோல் எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் புத்தாண்டு கொண்டாட்டம் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.

புதுவை மாநிலம் வளர்ச்சியடையக்கூடாது. நலத்திட்ட உதவிகள் வழங்குவதை தாமதப்படுத்த வேண்டும். வேலைவாய்ப்பு இருக்கக் கூடாது. கட்டுமானப் பணிகள் நடைபெறக் கூடாது என்று ஒரு சிலர் தொடர்ந்து முட்டுக்கட்டை போடுகின்றனர். நள்ளிரவில் கூட அதிகாரிகளை எழுப்பி தொல்லை கொடுக்கின்றனர்.

இந்த தொல்லைகள் எல்லாம் நீங்குகின்ற ஆண்டாக 2021 அமைய வேண்டும். தனிப்பட்டவரின் விருப்பு வெறுப்புகளை யார் மீதும் திணிக்கக் கூடாது. ஜனநாயக நாட்டில் பெரும்பான்மையாக உள்ளவர்களின் கருத்துகளை மதிக்கவேண்டும்.

இதனை மத்தியில் உள்ள பிரதமர் மோடியும், கவர்னர் கிரண்பெடியும் கடைபிடிப்பது இல்லை. நாங்கள் முனைந்து பாடுபட்டாலும் கூட, எதிர்பார்க்கின்ற வளர்ச்சியை எங்களால் கொடுக்க முடியவில்லை. கையை கட்டிக்கொண்டு வேலை செய் என்றால் எப்படி செய்ய முடியும்.

எதிர்க்கட்சிகள் கவர்னருக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றன. இதனால் மாநில வளர்ச்சிக்கு தடையாக இருந்து வருகின்றனர். மாநில வளர்ச்சியில் எதிர்க்கட்சிகளின் பொறுப்பும் உள்ளது. வரும் ஆண்டு ஒளிமிகுந்த ஆண்டாக அமையட்டும். இவ்வாறு அவர் கூறினார்.

காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், வருகிற 8-ந் தேதி கவர்னரை கண்டித்து போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டு இருப்பது குறித்து முதல்-அமைச்சர் நாராயணசாமியிடம் கருத்து கேட்கப்பட்டது. இதற்கு அவர் பதிலளிக்கையில், ‘இது அரசியல் கட்சியினரிடம் கேட்க வேண்டிய கேள்வி. நான் காங்கிரஸ் கட்சியின் தொண்டன். என்னை அவர்கள் அழைத்தால் நான் போராட்டத்தில் கலந்து கொள்வேன். அதனால் ஏற்படும் எந்த விளைவுகளையும் எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன்’ என்றார்.

மேலும் செய்திகள்