திருபுவனை அருகே வரதட்சணை கொடுமை: தூக்கில் தொங்கிய இளம்பெண் சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் தந்தை புகார்

திருபுவனை அருகே வரதட்சணை கொடுமை செய்யப்பட்ட பெண் தூக்கில் தொங்கினார். மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.

Update: 2021-01-02 01:34 GMT
திருபுவனை, 

திருபுவனை அருகே பி.எஸ்.பாளையம் காலனியை சேர்ந்தவர் மதிராஜா (வயது 30). இவருக்கும், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே ஆவுடையான்பட்டு புதுக்காலனியை சேர்ந்த ஆனந்தன் மகள் அமலாவுக்கும் (24) கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.

மதிராஜாவுக்கு ஏற்கனவே திருமணம் நடந்திருப்பதும், அதனை மறைத்து 2-வதாக தன்னை திருமணம் செய்து கொண்டதும் அமலாவுக்கு அண்மையில் தெரியவந்தது. இதுபற்றி கேட்டபோது, மதிராஜா மதுகுடித்துவிட்டு வந்து அமலாவை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் வரதட்சணை கேட்டு மதிராஜாவின் தாயார் சித்ரவதை செய்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை அமலா தனது வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மதகடிப்பட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அமலாவை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

அமலாவின் சாவு பற்றி அறிந்த அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் மதகடிப்பட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று மகளின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

அப்போது அமலா கைகளில் அரைந்த இட்லி மாவு இருப்பதை பார்த்தனர். இதுபற்றி ஆனந்தன், பேரன் குருபிரியனிடம் கேட்டபோது தந்தை மதிராஜா தாய் அமலாவை அடித்து கொடுமைப்படுத்தியதாக தெரிவித்தான்.

இதையடுத்து தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக திருபுவனை போலீசில் ஆனந்தன் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன், சப்-இன்ஸ்பெக்டர் அஜய்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதிராஜாவுக்கும், அமலாவுக்கும் திருமணம் நடைபெற்று 4 ஆண்டுகளே ஆவதால், அமலாவின் சாவு குறித்து தாசில்தார் விசாரணையும் நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்