மிரட்டி கையெழுத்து வாங்கி சாராய வியாபாரி மகன்களிடம் இருந்து மதுக்கடை பறிப்பு பெண் தாதா எழிலரசி உள்பட 3 பேருக்கு வலைவீச்சு

சாராய வியாபாரியின் மகன்களை மிரட்டி கையெழுத்து வாங்கி மதுக்கடையை பறித்ததாக பெண் தாதா எழிலரசி உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2021-01-02 01:31 GMT
காரைக்கால்,

காரைக்காலை அடுத்த திரு-பட்டினத்தை சேர்ந்தவர் பிரபல சாராய வியாபாரி ராமு. இவர் எழிலரசியை 2-வது திருமணம் செய்ததையடுத்து கடந்த 2013-ம் ஆண்டு வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இதற்கு பழிக்குப்பழியாக ராமுவின் முதல் மனைவி, அவரது உறவினர் படுகொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பாக எழிலரசி மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர்.

இந்தநிலையில் ஜாமீனில் வெளியே வந்த எழிலரசி தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் அவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதானார். முன்னாள் அமைச்சர் வி.எம்.சி.சிவக்குமார் கொலையிலும் எழிலரசி மற்றும் அவரது கூட்டாளிகள் கைதாகினர். இதையடுத்து காரைக்கால் பகுதியில் பெண் தாதாவாக எழிலரசி வலம் வந்தார்.

இந்தநிலையில் திரு-பட்டினம் வாஞ்சூர் எல்லையில் செயல்பட்டு வந்த பிரபல சாராய வியாபாரி ராமுவுக்கு சொந்தமான மதுக்கடையை அவரது முதல் மனைவியின் மகன்கள் அஜீஸ்ராம், மாகேஷ்ராம் ஆகியோரும், எழிலரசியும் உரிமை கொண்டாடி வந்தனர்.

இதுதொடர்பாக முதல் மனைவியின் மகன்களை எழிலரசி தரப்பினர் மிரட்டி வந்ததாக தெரிகிறது. இதனால் அப்பகுதியில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதாக கருதி திரு-பட்டினம் போலீசார் பரிந்துரையின்படி மாவட்ட துணை கலெக்டர் உத்தரவின்படி அந்த மதுக்கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

இந்தநிலையில் பிரபல பெண் தாதா எழிலரசி (42), விக்ரமன் (42), புதுச்சேரியைச் சேர்ந்த ஆனந்த் (45) ஆகியோருடன் சேர்ந்து அஜேஸ்ராம், மாகேஷ்ராம் ஆகியோரை மிரட்டி மதுக்கடையை எழுதி வாங்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து திரு-பட்டினம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் எழிலரசி, விக்ரமன், ஆனந்த் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்