செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவிலில் வாலிபர் வெட்டிக்கொலை; 4 பேர் கொண்ட கும்பலுக்கு வலைவீச்சு
முன்விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் களத்துமேடு முத்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 24). இவர் மீது மறைமலைநகர் போலீஸ் நிலையத்தில் 5 வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் நேற்று இரவு சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து அனுமந்தபுரம் செல்லும் சாலையில் அஜித்குமார் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் அஜித் குமாரை வழி மறித்தது. அவர்களிடம் இருந்து தப்பித்து கொள்வதற்காக அஜித்குமார் ஓடினார். ஆனால் விடாமல் துரத்தி சென்ற அந்த கும்பல் அஜித்குமாரை ஓட ஓட விரட்டி சரமாரியாக அரிவாளால் வெட்டி படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியது.
இதுகுறித்து அந்த பகுதி மக்கள் மறைமலைநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மறைமலைநகர் போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்த அஜித்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் விசாரணையில் முன்விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் இந்த கொலையில் தொடர்புடைய 4 பேர் கொண்ட கும்பலை பிடிப்பதற்காக மறைமலைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகோபால் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.