போலீசாரின் நடவடிக்கையால், சென்னையில் புத்தாண்டு கொண்டாட்ட சாலை விபத்துகள் 7 மடங்கு குறைந்தன; 41 பேர் மட்டுமே காயம்

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது போலீசாரின் நடவடிக்கை காரணமாக, இந்த ஆண்டு புத்தாண்டு நேர விபத்துகள் 7 மடங்கு குறைந்தன. 41 பேர் மட்டுமே விபத்தில் சிக்கி காயமடைந்தனர்.

Update: 2021-01-01 23:22 GMT
புத்தாண்டு கொண்டாட தடை
புத்தாண்டு என்றாலே மக்களின் கொண்டாட்டங்கள் நிறைந்து காணப்படும். அதிலும் இளைஞர் பட்டாளம் புத்தாண்டு தினத்தை உற்சாகமாகவும், ஆரவாரத்துடனும் கொண்டாடுவார்கள். ஆனால் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இந்த ஆண்டு தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.குறிப்பாக தலைநகர் சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களை கட்டுப்படுத்துவதில் போலீசாரின் கெடுபிடி அதிகமாகவே இருந்தது எனலாம். மெரினா உள்ளிட்ட கடற்கரை பகுதிகள் என கொண்டாட்டங்கள் அரங்கேறும் அனைத்து பகுதிகளும் போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டன. இரவு 10 மணிக்கு மேல் சாலையில் தேவையில்லாமல் வாகனங்களில் யாரும் செல்லாதவாறு தீவிரமாக கண்காணித்தனர். நகரின் முக்கிய சாலைகள் அனைத்தும் தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டன.

போலீசார் நடவடிக்கை
போலீசாரின் இந்த அதீத நடவடிக்கை காரணமாக சாலையில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை வாகனங்கள் நடமாட்டம் எதிர்பார்த்தபடி இல்லை. ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு ஆர்வத்தால் சாலைகளில் வாகனங்களில் வேகமாக செல்லும் இளைஞர்கள் விபத்தில் சிக்குவது உண்டு.

இந்த ஆண்டு போலீசார் கெடுபிடி எதிரொலியாக புத்தாண்டு விபத்துகள் பெருமளவு குறைந்துள்ளன. 2019-ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது சென்னையில் நடந்த விபத்துகளில் சிக்கி 304 பேர் காயமடைந்தனர். 2020-ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 318 ஆக உயர்ந்தது. இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை வெகுவாக குறைந்திருக்கிறது.

7 மடங்கு குறைந்தது
இந்த ஆண்டு சென்னையில் நடந்த விபத்துகளில் 41 பேர் மட்டுமே சிக்கியுள்ளனர். இதனால் கடந்த ஆண்டை காட்டிலும் சென்னையில் புத்தாண்டு நேர விபத்துகள் 7 மடங்கு குறைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்