3 பேருக்கு கொரோனா தொற்று எதிரொலி: லண்டனில் இருந்து வந்தவர்களை கண்காணிக்கும் பணி தீவிரம்
லண்டனில் இருந்து மதுரை வந்தவர்களில் 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து லண்டனில் இருந்து வந்தவர்களை தீவிரமாக கண்காணிக்கும் பணியில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.;
மதுரை,
மதுரையில் நேற்று புதிதாக 22 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 14 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 519 ஆக உயர்ந்துள்ளது. இந்தநிலையில் மதுரையில் நேற்று 31 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதில் 20 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். இவர்களுடன் சேர்த்து மதுரையில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 890 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களை தவிர 177 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். சிகிச்சையில் இருப்பவர்களும் விரைவில் குணம் அடைவார்கள் என டாக்டர்கள் தெரிவித்தனர். மேலும், ஏற்கனவே குணம் அடைந்து வீட்டிற்கு சென்றவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் வகையிலான ஆலோசனைகளை மருத்துவ குழுவினர் தினந்தோறும் தெரிவித்து வருகின்றனர். இதுபோல், மதுரையில் நேற்று யாரும் உயிரிழக்கவில்லை. அதன்படி கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 452 ஆக நீட்டித்து வருகிறது.
லண்டனில் இருந்து மதுரைக்கு 2-ம் கட்டமாக வந்தவர்களில் 72 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் தனித்தனியாக அடையாளம் காணப்பட்டு சுகாதாரத்துறையின் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார்கள். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே லண்டனில் இருந்து வந்த மதுரை நகர் பகுதியை சேர்ந்த வாலிபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. மேலும் நடைபெற்ற பரிசோதனையில் மதுரை புறநகர் பகுதியை சேர்ந்த 35 வயது பெண், அவருடைய மகள் ஆகியோருக்கு நேற்று முன்தினம் கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்களிடம் இருந்து பெறப்பட்ட சளிமாதிரிகள் புனேவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அது வந்த பின்னரே அவர்களை தாக்கி இருப்பது புதுவித கொரோனாவா என்பது தெரியவரும்.
தற்போது அவர்கள் இருவரும் மதுரை தோப்பூர் சிறப்பு கொரோனா மையத்தில் டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார்கள். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. மதுரையில் பெரும்பாலான இடங்களில் பொதுமக்கள் முககவசம் அணிவது கிடையாது. புதுவித கொரோனா வைரஸ் பரவும் அச்சம் இருப்பதால், பொது இடங்களுக்கு செல்லும் போது கண்டிப்பாக முககவசம் அணிந்து செல்லவேண்டும் எனவும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் சுகாதாரத்துறையினர் அறிவுறுத்துகின்றனர்.