கீழடி, ஆதிச்சநல்லூரில் செப்டம்பர் மாதம் வரை அகழாய்வு நடத்த அனுமதி - மதுரை ஐகோர்ட்டில், மத்திய தொல்லியல் துறை தகவல்
கீழடி, ஆதிச்சநல்லூரில் செப்டம்பர் மாதம் வரை அகழாய்வு நடத்த மத்திய தொல்லியல் துறை அனுமதி அளித்து உள்ளதாக மதுரை ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.;
மதுரை,
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராஜ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், “தமிழ்நாட்டில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பூர்வகுடிகள் வாழ்ந்துள்ளனர். தமிழ்மொழி 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. இதனை உறுதி செய்ய உதவும் வகையில் கீழடி, ஆதிச்சநல்லூர், கொடுமணல் பகுதிகளில் பல்வேறு பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. இங்கு அகழாய்வுகளை தொடர்ந்து நடத்த வேண்டும். அதேபோல தாமிரபரணி ஆற்றுப்படுகை கிராமங்கள் மற்றும் சிவகங்கை மாவட்டம் கொந்தகை உள்ளிட்ட இடங்களை தொல்லியல் பகுதிகளாக அறிவித்து, அங்கும் அகழாய்வு நடத்த உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு ஏற்கனவே நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்த போது, தொல்லியல் துறை சார்பில் பதில் அளிக்கப்பட்டது.
அப்போது, ஆதிச்சநல்லூர், புலிகட்டு, மலையடிப்பட்டி, கீழடி ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளின் அறிக்கைகளை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் அறிக்கைகள் வெளியிடப்படும். கொடுமணலில் கண்டெடுக்கப்பட்ட அகழாய்வு பொருட்களில் 10 பொருட்கள் கார்பன் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு உள்ளன. கொரோனா நோய் தொற்று காரணமாக பரிசோதனை செய்வதற்கு தாமதம் ஆகிறது. மேலும் கொடுமணல் அகழாய்வில் 96 பொருட்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. அவற்றில் 356 தமிழ் பிராமி எழுத்துகள் உள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
மீண்டும் இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரல் ஆஜராகி, “கீழடி, ஆதிச்சநல்லூர், கொடுமணல், சிவகளை, மயிலாடும்பாறை, கொற்கை, கங்கைகொண்ட சோழபுரம் ஆகிய இடங்களில் 2021-ம் ஆண்டு செப்டம்பர் வரை அகழாய்வு நடத்த மத்திய தொல்லியல் துறை அனுமதி வழங்கி உள்ளது” என்று தெரிவித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.