சேலத்தில் சாரல் மழை: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
சேலத்தில் பெய்த சாரல் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
சேலம்,
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலையில் இருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதன்பிறகு இரவில் லேசான சாரல் மழை பெய்தது.
இந்த நிலையில், சேலம் மாநகரில் நேற்று காலை 6 மணி முதல் திடீரென மழை பெய்ய ஆரம்பித்தது. அதாவது, சேலம் பெரிய கடை வீதி, சின்ன கடை வீதி, பழைய மற்றும் புதிய பஸ் நிலையம், அஸ்தம்பட்டி, மணக்காடு, அழகாபுரம், கிச்சிப்பாளையம், சூரமங்கலம், அம்மாபேட்டை, குகை, பெரமனூர், பள்ளப்பட்டி உள்பட பல்வேறு இடங்களில் விடாமல் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே வர சிரமப்பட்டனர்.
அதேசமயம் ஆனந்தா இறக்கம், மாநகராட்சி வணிக வளாகம், பால் மார்க்கெட், உழவர் சந்தைகள் உள்ளிட்ட இடங்களில் சாலையோர காய்கறி வியாபாரம் பாதித்தது. மழை காரணமாக நேற்று காலையில் அரசு மற்றும் தனியார் அலுவலக பணிகளுக்கு சென்றவர்கள், அன்றாடக் கூலி வேலைக்கு சென்ற தொழிலாளர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். ஒரு சிலர் குடைகளை பிடித்தவாறு வெளியில் சென்று வந்ததை காணமுடிந்தது.
இதேபோல் புறநகர் பகுதிகளான தலைவாசல், கெங்கவல்லி, ஆத்தூர், ஆணைமடுவு, வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், மேட்டூர், ஓமலூர், சங்ககிரி, எடப்பாடி உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. ஏற்காட்டில் நேற்று காலை வழக்கத்தைவிட மேக மூட்டம் அதிகமாக காணப்பட்டது. சேலத்தில் இருந்து ஏற்காடு செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு சென்றன.
கடும் குளிர் நிலவியதால் ஏற்காட்டில் வசிக்கும் மலைவாழ் மக்கள் தங்களது வீடுகளிலேயே முடங்கி இருந்தனர். தங்கும் விடுதி, ஓட்டல்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன. தொடர்ந்து சாரல் மழை பெய்து கொண்டிருந்ததால் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
சேலம் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பதிவான மழை அளவு மில்லி மீட்டரில் விவரம் வருமாறு:-
மேட்டூர்-8.8, ஏற்காடு- 6.8, ஆத்தூர்- 4.4., கரியகோவில்-2, ஆனைமடுவு-1.