158 ஆண்டுகள் பழமையானது: சேலம் கோர்ட்டு கட்டிடம் ரூ.6¼ கோடியில் புனரமைக்கும் பணி - மாவட்ட முதன்மை நீதிபதி தொடங்கி வைத்தார்
சேலம் கோர்ட்டு கட்டிடம் ரூ.6¼ கோடியில் புனரமைக்கும் பணி நடைபெற உள்ளது. இந்த பணியை மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு தொடங்கி வைத்தார்.
சேலம்,
சேலம் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மாவட்ட நீதிமன்றம் முதன்முதலாக கட்டப்பட்டது. 1862-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கட்டிடம் 158 ஆண்டுகள் ஆன நிலையிலும் கூட இன்னும் எந்தவிதமான பழுதும் இல்லாமல் கம்பீரமாக காட்சியளிக்கிறது. இந்த கட்டிடம் 19 ஆயிரத்து 797 சதுரடி பரப்பளவு கொண்டதாகும்.
இந்த கோர்ட்டில் தற்போது தொழிலாளர் நீதிமன்றம், அத்தியாவசிய பண்டங்கள் சிறப்பு நீதிமன்றம், நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு நீதிமன்றம், நுகர்வோர் நீதிமன்றங்கள் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. தற்போதைய மாவட்ட முதன்மை நீதிமன்றம் உள்பட 20-க்கும் மேற்பட்ட கோர்ட்டுகள் புதிய கட்டிடத்தில் இயங்கி வருகிறது.
158 ஆண்டுகள் ஆனாலும் எந்தவிதமான பழுதும் ஆகாமல் இருந்தாலும் இந்த கோர்ட்டு கட்டிடத்தை சீரமைக்க சென்னை ஐகோர்ட்டு நடவடிக்கை மேற்கொண்டது. இதற்காக ரூ.6 கோடியே 36 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த நிலையில், மிகவும் பழமை வாய்ந்த கோர்ட்டு கட்டிடத்தை பழமை தொன்மை மாறாமல் இருக்கும் வகையில் புனரமைக்கும் பணி தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில், மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு தலைமை தாங்கி கோர்ட்டு கட்டிடம் புனரமைக்கும் பணிகளை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நீதிபதிகள் இளங்கோ, சுகந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு நிருபர்களிடம் கூறுகையில், சேலம் மாவட்டத்திலேயே முதல் முறையாக ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இந்த கோர்ட்டு கட்டிடம் கட்டப்பட்டது. தற்போது பழமை மாறாமல் இருக்கும் வகையில் இந்த கட்டிடத்தை புனரமைக்கும் பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 9 மாதத்தில் இந்த பணிகள் முடிவடையும், என்றார்.