புத்தாண்டையொட்டி தேவாலயங்களில் நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனை - மாவட்டத்தில் 1,200 போலீசார் பாதுகாப்பு பணி

புத்தாண்டையொட்டி வேலூர் மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

Update: 2021-01-01 12:14 GMT
வேலூர்,

2020-ம் ஆண்டு விடை பெற்று நேற்று நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு (2021) பிறந்தது. வேலூர் மாவட்டத்தை பொறுத்தவரையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. பொதுமக்கள் தங்கள் வீடுகள் முன்பு புத்தாண்டை வரவேற்கும் வகையில் வண்ண கோலங்கள் போட்டனர். சில இடங்களில் சரியாக 12 மணி அளவில் வாணவெடிகள் வெடிக்கப்பட்டது.

தேவாலயங்களில் புத்தாண்டு சிறப்பு ஆராதனை நடந்தது. புத்தாடை அணிந்து கிறிஸ்தவர்கள் தேவாலயங்களுக்கு சென்று வழிபட்டனர். வேலூர் கோட்டை எதிரே உள்ள சி.எஸ்.ஐ. மத்திய தேவாலயத்தில் பிஷப் சர்மாநித்தியானந்தம் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

வேலூர் கிரீன்சர்க்கிள் அருகே உள்ள சீயோன் பெந்தெகொஸ்தே ஆலயத்தில் பாஸ்டர் இமானுவேல்பால் தலைமையில் சிறப்பு ஆராதனை நடந்தது. இந்த ஆலயத்துக்கு வந்த பொதுமக்களுக்கு கைகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் உள்ளே அனுப்பினர்.

இதேபோல வேலூர் விண்ணேற்பு ஆலயம் உள்பட மாவட்டத்தில் உள்ள பல தேவாலயங்களில் சிறப்பு ஆராதனை நடத்தப்பட்டது. புத்தாண்டு பிறந்த நேரத்தில் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர். வீடுகளில் குடும்ப உறுப்பினர்கள் கேக் வெட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். நேற்று பேக்கரி கடைகளில் கூட்டம் களை கட்டியது.

புத்தாண்டையொட்டி மாவட்டம் முழுவதும் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆலயங்கள், கோவில்கள் பகுதிகளில் போலீசார் சீருடையிலும், சாதாரண உடையிலும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இன்றும் (வெள்ளிக்கிழமை) பகலில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் நிலையம், ரெயில் நிலையம், வழிபாட்டுத்தலங்கள், பொழுதுபோக்கு இடங்கள் போன்ற இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

புத்தாண்டையொட்டி மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள், மோட்டார்சைக்கிள் பந்தயத்தில் ஈடுபடும் நபர்கள், பொதுமக்களுக்கு இடையூறாக வாகனம் ஓட்டுபவர்கள், மதுபோதையில் கலாட்டாவில் ஈடுபடுபவர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் வெளிநாட்டுக்கு செல்ல பாஸ்போர்ட்டு பெற மற்றும் வேலைவாய்ப்பு பெற காவல் துறை மூலமாக வழங்கப்படும் நன்னடத்தைச் சான்றிதழ் வழங்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் ஒருசில இடங்களில் இளைஞர்கள் ஆரவாரத்தில் ஈடுபட்டனர்.

மாவட்டத்தில் மொத்தம் 58 இடங்களில் தடுப்புகள் வைத்து போலீசார் வாகன சோதனை செய்தனர். இருசக்கர வாகனங்கள் மூலம் 60 குழுக்களும், ஜீப்கள் மூலம் 6 குழுக்களும், பிரச்சினை ஏதும் ஏற்பட்டால் சம்பவ இடத்துக்கு உடனடியாக செல்ல 147 சிறப்பு போலீசார் கொண்ட சிறப்பு குழுக்களும் அமைக்கப்பட்டு அவர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்